Islamophobia Tamil Nadu

பி.எஃப்.ஐ நிர்வாகிகள் மீது பொய் வழக்கு; கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் !

 பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனைந்த கோவை காவல்துறையின் நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மண்டல தலைவர் அ.அன்வர் உசேன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா என்ற உயிர்க்கொள்ளி தொற்றுநோய் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இந்த நோயை பரவாமல் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, மத பேதமின்றி உழைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று திட்டமிடப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்ற பாசிச வெறி கொண்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு சில நபர்களை கைது செய்துள்ளது. இந்த வழக்கினை திசை திருப்பவும், இந்துத்துவா அமைப்பினரை திருப்திப்படுத்தவும் கோவை மாவட்ட காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது 20.03.2020 அன்று துண்டுப்பிரசுரம் விநியோகித்து அதில் இந்து இயக்க தலைவர்களை விமர்சித்ததாகவும், அந்த துண்டு பிரசுரம் விநியோகித்ததிலிருந்து உந்துதல் ஏற்பட்டு தான் தப்லிக் ஜமாத்தினர் டெல்லி சென்றதாகவும் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால், நடந்த உண்மை என்னவென்றால் டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாசிச பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கலவரத்தை நாடே அறிந்தது. அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நடந்த கலவரத்தின் உண்மை தன்மையையும் மக்களுக்கு தெரியப்படுத்தவும், கலவரத்தை நடத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி விநியோகம் செய்யப்பட்டது.

ஆகையால், உண்மைக்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய்வழக்கு புனைந்த காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். கோவை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பொய்யான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.