Indian Judiciary Journalist Muslims

உபி: சித்திக் கப்பனுக்கு ஜாமீன் மறுப்பு..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை லக்னோ அமர்வு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இம்மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, அக்டோபர் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி சஞ்சய் சங்கர் பாண்டே உத்தரவிட்டார்.

இதனால் அவர் சிறையிலேயே மீண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிப்ரவரி 2021 இல் கப்பன் மற்றும் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்தது. கப்பன் மீது சுமத்தப்பட்ட UAPA வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டாலும், PMLA வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்ட்டுள்ளார்.

அக்டோபர் 2020 இல் தலித் சமூக பெண்ணின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் மரணம் குறித்து செய்தி சேகரிக்க உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸுக்குச் செல்லும் போது சித்திக் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. “மத விரோதத்தை தூண்டுவதற்கும் நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கும், அவர் ஒரு பெரும் சதித்திட்டத்தின் பகுதியாக இருந்தார்” என்று உபி பாஜக அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு முன்பு 700 நாட்களுக்கு மேல் சிறையில் கழித்து இருந்தார். தற்போது வரை தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

PMLA வழக்கின் கீழ், சித்திக் மற்றும் மூன்று பேர் “கலவரத்தைத் தூண்டுவதற்காக” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிடமிருந்து பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். PFI மாணவர் பிரிவுத் தலைவரான ரவுப் ஷெரீப், சித்திக்கின் ஹத்ராஸ் பயணத்திற்கு “நிதி” அளித்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது. உபி காவல்துறையும் குற்றப்பத்திரிகையில் இதை குறிப்பிட்டுள்ளது.