Indian Judiciary Muslims

கேரளா : 13 ஆண்டுகள் தீவிரவாத பட்டத்தை சுமந்த 5 முஸ்லிம்கள் ! இறுதியில் NIA நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலை!

கேரளாவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிபொருள் பறிமுதல் செய்த வழக்கில் 5 முஸ்லிம்கள் தேசிய புலனாய்வு துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்!

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தடியான்டாவிடே நசீர், ஷராபுதீன் உள்ளிட்ட 5 முஸ்லிம்கள், மற்றும் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

“சட்டவிரோதமாக வெடிமருந்துகளை வைத்திருந்ததற்கும், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டிய நிரபராதிகள்” என்று சிறப்பு நீதிபதி கே.கமானீஸ் குறிப்பிட்டார்.

வெடிபொருள் சட்டம் பிரிவு 4 இன் கீழ் ஒரு குற்றத்தை நிரூபிக்க வேண்டுமானால், குற்றம் சாட்டப்பட்டவர், பிறர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏதேனும் வெடிபொருள் வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். அல்லது வேறு ஒரு நபர் மூலமாக மக்கள் உயிருக்கு ஆபத்து அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏதேனும் வெடிபொருள் வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு நீதிமன்றம் கூறியது.

ஆனால் இந்த வழக்கில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களால் தான் கையாளப்பட்டது என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை.

“குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று நிறுவவதற்கு எந்த ஆதாரமும் முகாந்திரமும் இல்லாத ஒரு வழக்கைத் தொடர்வது, நீதிமன்றத்தின் நேரத்தை தான் வீணடிக்கும்” என்று சிறப்பு நீதிபதி கே.கமானீஸ் கூறினார்.