NPR NRC

‘நாடு தழுவிய என்ஆர்சி நடத்தும் திட்டமில்லை’ என்று மோடி அரசு இப்போது கூறுமானால் மாநிலங்களவையில் அமித் ஷா கூறியது பொய்யா?

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) கொண்டுவரும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், இப்போதைக்கு மத்திய அரசிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை (NRC) நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னுக்கு பின் முரண்பாடான பேச்சுக்கள்:

“அசாம் (என்.ஆர்.சி) பயிற்சி உச்சநீதிமன்ற உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. என்.ஆர்.சி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும், அப்போது மீண்டும் அசாமில் மேற்கொள்ளப்படும். எந்த மதத்தவரும் இதற்கு அஞ்ச தேவை இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 2019 நவம்பரில், ராஜ்ய சபாவில் பேசியுள்ளார். இப்போது இரண்டு அறிவிப்புகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

உள்துறை அமைச்சகம் உண்மையில் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதா, அல்லது என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பின்வாங்கிவிட்டதா? அல்லது, விமர்சகர்கள் குறிப்பிடுவது போல சொல்வது ஒன்று செய்வது வேறு எனும் யுக்தியை கையாள்கிறதா மோடி அரசு? என்கின்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

பிரதமர் மோடியின் பேச்சு:

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம், பிரதமர் நரேந்திர மோடி “நாடு தழுவிய என்.ஆர்.சி யாய் மேற்கொள்ளும் விவகாரத்தில் தனது அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை” என பேசியிருந்தார். எனினும் அமித் ஷா தொடர்ந்து இதற்கு நேர்மாற்றமாக பேசி வருவது மோடியின் பேச்சை நம்புவதை கடினமாக்குகிறது. பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையில் ” நாட்டின் பிற பகுதிகளிலும் பல்வேரு கட்டங்களாக என்.ஆர்.சி யை கொண்டுவருவோம்” என கூறப்பட்டிருந்தது.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பதற்கான பயிற்சியைப் பயன்படுத்தி நாடு தழுவிய என்.ஆர்.சி யை அமல்படுத்த மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது என்றும் வாதிடபடுகிறது.

என் பி ஆர் எப்போது துவங்கப்பட்டது?

நாட்டின் ஒவ்வொரு குடியிருப்பாளரின் அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை புள்ளிவிவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிப்பதற்காக என்.பி.ஆர் , முதன்முதலில் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 க்கான வீடு பட்டியலிடும் பயிற்சியுடன் இது நடத்தப்படும், இதற்காக அரசாங்கம் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

முன்னாள் உள்துறை அமைச்சரின் பேச்சு:

நவம்பர் 26, 2014 அன்று அப்போதைய உள்துறை இணை அமைச்சர் கிரேன் ரிஜிஜு ராஜ்ய சபாவில் , “தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) என்பது குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களையும் உள்ளடக்கிய அனைத்து ‘வழக்கமான குடியிருப்பாளர்களின்’ பதிவாகும். ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் குடியுரிமை நிலையை சரிபார்ப்பதன் மூலம் இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி) உருவாக்குவதற்கான முதல் படியாக என்.பி.ஆர் உள்ளது. ” என்று பேசி இருந்தார்.

உள்துறை அமைச்சகம் கடந்த காலங்களில் என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது தான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. இப்போது, எதிர்ப்பு அதிக அளவில் எழுந்த நிலையில், என்.ஆர்.சிக்கு என்.பி.ஆருடன் எந்த தொடர்பும் இல்லை என்று மோடி அரசாங்கம் கூறி வருகிறது.

இந்த ஆக்கத்தில் தரப்பட்டுள்ள ஆதாரபூர்வமான தரவுகளை கொண்டு நீங்களே ஆக்கத்தின் தலைப்பில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை பெற்று கொள்ள முடியும்.