உ.பி.யில் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்!
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அன்று, இரவு 10:15 மணியளவில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள வினய்பூர் கிராமத்தில் வசிக்கும் தாவூத் அலி தியாகி, தனது வீட்டிற்கு வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
தாவூத்தின் மருமகன் நயீம் தியாகி மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்ரம், அவருக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
திடீரென்று 6,7 பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த ஒரு கும்பல், தியாகி மீது தாக்குதல் நடத்தினர்.
ஜெய் ஸ்ரீ ராம் கோஷமுடன் கொலைவெறி தாக்குதல்:
“அந்த கும்பல், ஜெய் ஸ்ரீராம் என்று கூச்சலிட்டபடி வானில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்’ என்று சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்து தன் தந்தையின் அருகில் ஓடி வந்த அவரின் மகள் லுப்னா தியாகி, “எல்லாவற்றையும் என் கண்முன்னே பார்த்து நான் உணர்ச்சியற்றவளாக இருந்தேன்,” என்று கூறினார்.
“எனது தந்தையின் மீது நடத்திய கொடூர தாக்குதலில் அவரின் உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டது. அந்த கும்பல் அனைவரையும் பயமுறுத்தும் விதமாக வானில் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தையை 16-17 பேர் அடித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் என் தந்தையைக் காப்பாற்றத் துணிந்து வரவில்லை.” என்று லுப்னா தியாகி கூறினார்.
“அவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார்; செயின் சாக்கெட்டுகளால் தாக்கப்பட்டார்,” என்று அவரது மகன் ஷாருக் தொடர்ந்தார். “அவர்கள் என் தந்தையின் தலையில் தாக்கினர், அவர்கள் என் உறவினர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இருப்பினும், அவர்கள் மிகவும் சிறியவர்கள் என்பதால், அங்கிருந்து ஓடி எனது உறவினர்கள் தப்பித்துவிட்டனர். .” என்கிறார் ஷாருக்
இந்த கும்பல் தாக்குதலில் படுகாயமடைந்த தாவூத் தியாகியை அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, மீரட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்!
ஏன் அடித்து கொன்றார்கள் என்றே தெரியவில்லை:
தாவூத்தின் மூத்த மகன் ஷாருக் தியாகி கூறுகையில், “எங்கள் தந்தைக்கு இது ஏன் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளாதாகவும், மேலும் பலரைக் கைது செய்ய உள்ளோம் என்று போலீசார் கூறினர். ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று கூறினார்.
தாவூத் தியாகி ஒரு விவசாயி. அவர் தனது மூன்று மகன்கள், ஒரு மகள் மற்றும் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவரது மூத்த மகன் ஷாருக் தியாகி இந்த ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.
தாவூத் தனது வாழ்நாளில் அவருக்கு எதிரிகள் இல்லை என்ற போதும், அவர் ஒரு எளிய மற்றும் மரியாதைக்குரிய மனிதராக சமூகத்தில் இருந்தும் கூட எதற்காக இந்த கொடூர கும்பல் கொலை நடந்தது என்று இதுவரை தெளிவு கிடைக்கவில்லை.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தியாகி கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த பிறகும், விசாரணையில் எந்த முன்னேற்றமும்’ இருப்பதாக தெரியவில்லை என்று தியாகியின் குடும்பத்தார் கூறுகின்றனர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், குடும்பம் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், அச்சத்திலும் பாதுகாப்பின்மையிலும் வாழ்கின்றனர்.
முஸ்லிம்களை ஊரை விட்டு துரத்த திட்டமிட்ட தாக்குதல்
தியாகியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கூறுகையில், தியாகி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாகோட்டில் ஒரு கூட்டம் நடந்தது, அங்கு முஸ்லிம்களை பயமுறுத்தும் திட்டம் தீட்டப்பட்டது.
செயல்பாட்டாளர் தேவேந்திர தாமா கூறுகையில் , “சில நபர்கள் மலிவான பிரபலத்தை விரும்பினர்; இதனால் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முன்பு பாகோட்டில் ஒரு கூட்டம் நடந்தது… (மற்றும்) மற்றொரு கூட்டம் (பின்னர்) 60-65 உறுப்பினர்களுடன் நடைபெற்றது. இப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதே நோக்கம்- கொலை அல்லது கொள்ளையடிப்பதற்காக அல்ல, மாறாக அச்சத்தை பரப்புவதாகும்..” என்றார்
“அவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தனர், அவர்கள் முதலில் தாக்கிய நபர் தியாகி, அவரைத் தாக்கியவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். இதற்கு முன், அந்த கிராமத்தின் மசூதியில் ஹனுமான் சாலிசாவை வாசிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது” என்று தாமா கூறினார்.
ஷாருக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். வினைபூரின் மக்கள் தொகை குர்ஜார் மற்றும் முஸ்லீம்களின் கலவையாகும், ஷாருக்கின் கூற்றுப்படி, சுற்றியுள்ள கிராமங்கள் குர்ஜார் ஆதிக்கம் செலுத்துகின்றன.
“இப்பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற விரும்புகிறோம். நாங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்தோம், ஆனால், எங்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்று ஷாருக் கூறினார்.