லட்சத்தீவில் உள்ள மக்கள் கடந்த வாரம் புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் பரவியதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். ஆவணத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டு வரையிலான பெண் மாணவர்களுக்கு, சல்வார் உடைகள் ( stitched divided skirts ) தைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரைக் கைகளாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள், உயர் வகுப்புகளில் படிக்கும் பெண் மாணவிகள் அடக்கமாக உடை அணியப் பழகியதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பமடைந்தனர். திடீர் சீருடை மாற்றம் குறித்து அங்குள்ள எவருடனும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக லட்சத்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.
சீருடையில் மாற்றம் :
கடந்த ஏப்ரல் 8-ம் தேதி, லட்சத்தீவு யூனியன் பிரதேச கல்வி இயக்குநர் ராகேஷ் சிங்கால் கையொப்பமிட்ட மாதிரிகளுடன் கூடிய ரெடிமேட் சீருடைகளை வழங்குவதற்காக விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆர்வமுள்ள டெண்டர் கோரப்பட்டது. ஆறு நெடுவரிசை அட்டவணைகள் ஆயத்த சீருடைகளுக்கான விவரக்குறிப்புகளைக் கொண்டிருந்தன: 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தைக்கப்பட்ட பாவாடை; உயர் வகுப்புகளுக்கு தைக்கப்பட்ட பிரிக்கப்பட்ட பாவாடை; மற்றும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரை கை சட்டைகள், டைகள் மற்றும் பெல்ட்கள்.
தற்போதுள்ள சீருடையில் ஆரம்பப் பள்ளியில் மாணவிகள் பாவாடை மற்றும் முழுக் கை மேலாடை அணிந்திருந்தனர், அதே சமயம் பெரியவர்கள் சல்வார் சூட் அணிந்திருந்தனர்.
“அவர்கள் எந்த பங்குதாரர்களையும் – உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது பெற்றோரிடம் கலந்தாலோசிக்கவில்லை. நீண்ட நாட்களாக நீலமும் வெள்ளையுமாக இருந்த சீருடையின் நிறத்தை மாற்றுவது குறித்து முன்பு விவாதம் நடந்தது. நாங்கள் சில வடிவங்களையும் முன்மொழிந்தோம். அதற்கு எந்த பதிலும் வராமலிருக்க, தற்போது திடீரென புதிய சீருடைகள் குறித்த டெண்டரை அறிவித்துள்ளனர்” என்கிறார் மினிகாய் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் எல்.ஜி.இப்ராஹிம்.
லட்சத்தீவைச் சேராதவர்கள் செய்யும் செயல்:
டெண்டரில் சீருடைகள் ‘ரெடிமேட்’ உடைகளாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குழந்தைகளின் அளவீடுகள் தெரியாமல் அதிகாரிகள் இதை எப்படி முடிவெடுப்பார்கள் என்று இப்ராஹிம் ஆச்சரியப்பட்டார். “ஒரு அளவு எப்படி அனைவருக்கும் பொருந்தும்? இந்த அனைத்து மாற்றங்களும் பள்ளி நிர்வாகி(அட்மின்), கல்விச் செயலாளர் அல்லது இயக்குநரால் தீர்மானிக்கப்படுகின்றன, அவர்களில் யாரும் லட்சத்தீவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கள் பழக்கவழக்கம், கலாச்சாரம் எதுவும் தெரியாது, ”என்கிறார் இப்ராஹிம்.
கோவிட்-19 காரணமாக குழந்தைகளும் நீண்ட நாட்களாக பள்ளிக்குச் செல்லவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கிய பிறகும், தொற்றுநோய்களின் போது பல ஒப்பந்த ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் பள்ளி நேரம் குறைக்கப்பட்டது, என இப்ராஹிம் மேலும் கூறினார்.
பிரபுல் படேல் பொறுப்பேற்றதில் இருந்து பிரச்னை:
கவரத்தியைச் சேர்ந்த மற்றொரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும் NCP தலைவருமான நிஜாமுதீன், கடந்த ஆண்டு மே மாதம் பிரபுல் படேல் பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாகம் பெரும்பாலும் எதேச்சதிகாரப் போக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார். நிலச் சீர்திருத்தங்கள், மாட்டிறைச்சி தடை , மதுபான விற்பனை மீதான தடைகளை நீக்குதல் மற்றும் குடியிருப்பாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பிற மாற்றங்கள் ஆகியவை அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்றது. சீருடை மாற்றத்தை சவப்பெட்டியில் இன்னொரு ஆணியாக மக்கள் பார்க்கிறார்கள்.
“அவர்கள் எந்த ஆலோசனையும் நடத்தாமல் எதேச்சதிகாரமாக நடந்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சீருடை மாற்றங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் நடப்பது வழக்கம். நோட்டீஸ் வந்த பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன,” என்கிறார் நிஜாமுதீன்.
லட்சத்தீவின் பல்வேறு தீவுகளில் உள்ள சுமார் 20 பள்ளிகள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் என்று அவர் கணிக்கிறார்.
பள்ளி மாணவிகளும் புதிய சீருடையில் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை மாணவி ஒருவரின் தாயார் ஹசீனா கூறுகிறார். “எனக்குத் தெரிந்த எல்லா பெற்றோர்களும் இந்த யோசனையை எதிர்க்கிறார்கள். பள்ளி மாணவிகளும் கூட. என் மகள் அடுத்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் நுழைகிறாள், பிரச்சினையை முன்னெடுத்துச் செல்ல பள்ளி மீண்டும் திறக்கப்படும் வரை நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். அவளும் அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற பெண்களும் பிரிக்கப்பட்ட பாவாடை மற்றும் அரை கை சட்டைகளை அணிந்து பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறுகிறார்கள், ” என்று ஹசீனா கூறுகிறார்.
ஹிஜாபுக்கும் தடையா?
‘தட்டம்’ அணியும் இஸ்லாமிய நடைமுறையில் சீருடைக் குறியீடு தலையிடுமா என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். பெரும்பாலான மாணவிகள் தலையைச் சுற்றி ஒரு சால்வையை அணிவார்கள். முஸ்லீம் பெரும்பான்மை மக்கள் என்பதால் ஹிஜாப் அணிவதற்கு எதிராக விதி எதுவும் இருக்காது என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
“ உத்தரவில், வயதான பெண்கள் தலையில் அணியும் மஃப்தா அல்லது தத்தம் (சால்வை) பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரைப் பாவாடைகளா அல்லது முழுப் பாவாடைகளா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. பெண்களை பாவாடை மற்றும் அரைக்கைக்கு மாறச் சொல்லும் இந்த திட்டம் உள்ளூர் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.”
“எந்த ஒரு மக்கள் பிரதிநிதியோ, எந்த பஞ்சாயத்து உறுப்பினரோ அல்லது உள்ளூர் அரசியல்வாதியோ, பெற்றோர் சங்கத்திடம் கூட அவர்கள் ஆலோசனை செய்து இந்த மாற்றம் குறித்து முடிவெடுக்கவில்லை. சீருடைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகள் (ஆளும் கட்சி தவிர) மற்றும் அமைப்களின் சார்பாக கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன..”
என்கிறார் பெற்றோரும் சிபிஐ(எம்) செயலாளருமான லுக்மானுல் ஹக்கீம்.