பயங்கரவாத நிதியுதவி தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தயாபாவின் நிறுவனரான ஹபீஸ் முஹம்மது சயீத்துக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் போது சயீத் இரண்டு வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2 வழக்குகள்:
பாகிஸ்தான் சட்டத்தின் கீழ் “தடைசெய்யப்பட்ட அமைப்பில்” உறுப்பினராக இருந்ததற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும், “சட்டவிரோத சொத்து” தொடர்பான குற்றச்சாட்டுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என ஹபிஸ் சயீதின் வழக்கறிஞர் இம்ரான் கில் தெரிவித்துள்ளர்.
மும்பை குண்டுவெடிப்பு:
கடந்த 2008 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த குற்றச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக ஹபீஸ் சயீத் உள்ளார் என இந்திய அரசு கூறி வருகிறது. பாகிஸ்தான் அரசு ஹபீசை கைது செய்ய வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னணி:
கடந்த டிசம்பரில் பயங்கரவாத நிதியளிப்பு தொடர்பாக சயீத் மீது குற்றம் சாட்டப்பட்டது. பல ஆண்டுகளாக நாடு முழுவதும் சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பின்னர், கடந்த மார்ச் மாதம், சயீத்தின் தொண்டு நிறுவனமான ஜமாத்-உத்-தாவா மற்றும் அதற்கு தொடர்புடைய மற்ற அமைப்புகளையும் பாகிஸ்தான் அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.