டெல்லி ஷஹீன்பாக்கில் சிஏஏ , என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தை வழிநடத்தும் அஸ்மா காத்தூன் (90), பில்கீஸ் (82), சர்வாரி (75) ஆகிய மூன்று பாட்டிகளை கண்டு இன்று உலகமே வியப்பில் உள்ளது.
நாங்கள் காந்தியின் வாரிசுகள்:
“ராணிகளே, தேசமக்களின் தாய்மாரே,
வீரர்களின் மனைவிகளே
ஈமானின் நல்வாழ்த்து பெற்ற நீங்கள்
இந்த பூமியின் ஆசிர்வாதம் ஆவீர்கள்” —
என்கிற 1905ம் ஆண்டு சுதந்திர போராட்டக்களத்தில் நெஞ்சுரத்துடன் களமிறங்கிய பெண்களை கண்ணியப்படுத்தும் விதமாக மௌலானா அல்தாப் ஹுசைன் அவர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு பாடலை கொண்டு இப்போதும் நாங்கள் போராட்டக்களம் இறங்கியுள்ளோம் என்கிறார் அனைவரிலும் மூத்தவரான அஸ்மா பாட்டி. நாங்கள் காந்தியின் வாரிசுகள் எங்களை தூக்கியெறிய யாராலும் இயலாது என்கிறார் இவர்களிலும் மிகவும் படிப்பறிவு பெற்ற பில்கீஸ் பாட்டி.
போராட தூண்டியது எது?
மிகவும் வயது மூத்த பாட்டிகளையுடையும் இளவயது பேத்திகளையும் ஒன்றிணைத்த இந்த ஷஹீன்பாக் போராட்டத்தில் பங்குபெறுவோரில் பலரும் தங்களது வாழ்நாளில் இப்படியொரு போராட்டத்திற்கு வீடு விட்டு இறங்காதவர்கள். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திருத்தினை எதிர்த்து போராட வேண்டுமென களம்காண என்ன காரணம் என கேட்டபோது…எங்களுடைய பேத்திகளில் பலர் கூறினார்கள், எங்களது பாடசாலைக்குள்ளிருக்கும் நூலகத்தினுள் புகுந்து எங்களை அடித்தவர்கள், நாளை நம் வீடு ஏறி வந்தும் நம்மை தாக்க கூடும் என்றனர்.
அந்த கனமே எங்களுக்கு தோன்றியது, அவர்கள் வந்து வெளியேற்றுவதை தவிர்க்க நாமாக வெளியேறி போராட்டக்களம் காண்போம் என்று தான் புறப்பட்டு வந்தோம்… ஒவ்வொரு நபராக அடையாளமிட்டு குடியுரிமை கொடுக்க இவர்கள் யார்? இது எங்கள் தேசம், எங்களின் உயிர் மூச்சு, சட்டத்தினை திரும்ப பெறும் வரை போராடுவோம்… இடையில் மரணம் வந்தால் போராட்டக்களத்திலேயே உயிரை கொடுப்போம். இந்த மண்ணுக்காக உயிர் போனால் அது எங்களது பரம்பரை மானத்தை காப்பாற்றியதற்கு சமம் என்கிறார் சர்வாரி பாட்டி.
இளைய போராளி:
இந்த பாட்டிகளின் கூட்டத்திலேயே மிக இளவயது போராளி….பிறந்து ஆறு மாதமே ஆன “குட்டி பாத்திமா” தன் உடலில் CAA, NRC க்கு எதிரான பதாகையை கட்டிக்கொண்டு தாயுடன் இணைந்து போராடி வருகிறாள். அவள் பேச தொடங்கிய முதல் வார்த்தை “இன்குலாப்”
புரட்சி பாட்டிகளின் பேட்டி:
“ஏறக்குறைய 2,000 பேர் , எப்போதும் குறையாமல் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுடைய வயது, இயலாமை, தள்ளாமை போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு மருந்து மாத்திரைகளுடன் நாட்களை கடத்த வேண்டியவர்கள், சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி முன்னெடுத்த போராட்டங்களின் மாதிரி பதாகைகளையும், தேசபக்தி பாடல்களையும் பாடிக்கொண்டு இத்தனை தெம்பும் தெளிவுமாக இருக்க காரணமென்ன? என சிந்தித்த போது…. அது அவர்களது உரிமைக்கான போராட்டம் என்பதையும் நாளைய அவர்களது எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் போராட்டம் என்பதையும் அவர்கள் உணர்ந்தே வந்துள்ளார்கள் என தோன்றியது.
இந்தியாவில் பெண்களால் வழிநடத்தப்பட்ட போராட்டங்கள் பல உண்டு. ஆனால் உலக சரித்தி்த்தில் முதன்முறையாக இது பாட்டிகளால் வழிநடத்தப்படும் போராட்டம் என இந்த தாதீஸ் ஆஃப் டெல்லி (டெல்லியின் பாட்டிகள்) போராட்டக்களத்தை பற்றி செய்தி சேகரிக்கப்போன நவோமி பர்டன் எழுதுகிறார்.
ஆக்கம்: நஸ்ரத்.