EVM

2019 மக்களவை தேர்தல் : 347 தொகுதிகளின் தரவுகள் (mismatch) பொருந்தவில்லை!

தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 2019 மக்களவை தேர்தலின் இறுதி வாக்கு எண்ணிகை மற்றும் தேர்தல் ஆணையம் அறிவித்த தற்காலிக பட்டியல்களுக்கு (provisional lists) இடையே பெரிய அளவிலான முரண்பாடுகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 347 தொகுதிகளின் தரவுகள் பொருந்தவில்லை. மேலும் 6 தொகுதிகளில் இந்த வித்தியாசமானது வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட அதிமாக உள்ளது என்றும் அந்த மனுவில் பல்வேறு மேற்கோள்களின் மூலம் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (ஏடிஆர்) மற்றும் காமன் காஸ் ஆகிய 2 நிறுவனங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளன. எனினும் இது முறையான விசாரணைக்கு இன்னும் பட்டியலிடப்படவில்லை. 17 வது மக்களவைக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன.

மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மூலம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“My Voter turnout app” என்ற மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்காளர் எண்ணிக்கை குறித்த நிகழ்நேர அறிக்கையை தேர்தல் ஆணையம் இந்த முறை அறிமுகப்படுத்தியது குறித்து மனுவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுட்டி காட்டியுள்ளன.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சாவடியிலிருந்தும் முதல் ஆறு கட்டங்களுக்கு நிகழ்நேர வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட்டு “சரியான எண்ணிக்கையிலான வாக்காளர்களை” அளித்தது. ஆனால் கடைசி கட்டத்தில் “சதவீத புள்ளிவிவரங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு முந்தைய தரவு அகற்றப்பட்டது” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வில், தேர்தல் ஆணையம் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் இறுதி வாக்குகளின் எண்ணிக்கையில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“தேர்தல் ஆணையத்தின் பிரதான இணையதளத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அனைத்துத் தொகுதிகளிலும் உள்ள முரண்பாடுகள் குறித்த ஆய்வு மற்றும் “My Voter turnout app” தரவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் மொத்தமுள்ள 542 தொகுதிகளின் முதன்மை சுருக்கத்தில் (Master Summary) 347 தொகுதிகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றன என்றும் ஒரு வாக்கு முதல் 101,323 வாக்குகள் வரை வேறுபாடு உள்ளது.” என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 தொகுதிகளில் வாக்கு வித்தியாசமானது வெற்றி பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட அதிமாக உள்ளது. ஆந்திராவில் குண்டூர் மற்றும் விசாகப்பட்டினம்; ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக்; ஜார்க்கண்டில் குந்தி; ஒடிசாவில் கோராபுட் மற்றும் உத்தரபிரதேசத்தில் மச்லிஷாஹர் ஆகியவையே அந்த 6 தொகுதிகள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் மூலம் இது குறித்து தரவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது, எனினும் இதற்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளுக்கான முடிவுகளும் மே 23 அன்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஜூன் 1 ம் தேதி 542 தொகுதிகளின் இறுதி வாக்குகளின் குறியீட்டு படிவங்களின் ( index forms ) எண்ணிக்கையை இன்னும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

“தற்காலிக புள்ளிவிவரங்களை கொண்டும் உள்ளது உள்ளபடி சரியான வாக்கு எண்ணிக்கையை குறிப்பிடாமலும் இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை சரியான முறையில் சீர் செய்யாத நிலையிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. துல்லியமான தரவுகளை ஒன்றிணைத்து வெளியிடுவதற்கான சட்டரீதியான கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்றுமனுவில் கூறப்பட்டுள்ளது. தரவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை செய்து அது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/swamiraj636/status/1197554123329003520

மேலும் தேர்தல் தரவுகளில் உள்ள முரண்பாடுகளை விசாரிப்பதற்கும், வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் குறை தீர்ப்பதற்குமான ஒரு தனி துறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Courtesy: Telegraph