திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் அனிந்திதா பவுமிக். முறையான டெண்டர் மூலம் மருத்துவமனையின் விலை உயர்ந்த உபகரணம் வாங்கப்படவில்லை என அவர் முகநூலில் பதிவிட்ட காரணத்தால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திரிபுராவின் தெற்கு மாவட்டத்தின் பெலோனியா சப் டிவிஷனைச் சேர்ந்த ஆளும் பாஜக எம்.எல்.ஏ., அருண் சந்திர பவுமிக் என்பவரின் மகள் தான் அனிந்திதா பவுமிக்.
“திரிபுராவில் 2018 ல் பாரதீய ஜனதா கட்சி அமைக்கப்பட்ட பின்னர் கருத்துச் சுதந்திரம் இல்லை. இடதுசாரிகளின் அரசாங்கத்தின் போது, சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக என் மீது பல முறை எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன்னர் நான் இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை – இந்த முறை, தற்போதைய பாஜக அரசாங்கத்தின் கீழ், எனது சமூக ஊடக பதிவிக்க்காக நான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன், ”என்கிறார் பவுமிக்.
மருத்துவமனைக்காக வாங்கிய விலை உயர்ந்த மருத்துவ உபகரணத்தை முறையாக டெண்டர் வெளியிட்டு வாங்காமல், முறைகேடாகவும் தன்னிச்சையாகவும் தனியாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளதே என கடந்த மார்ச் 24ம் தேதி அனிந்திதா பவுமிக் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட இப்பதிவை நீக்க வேண்டும் என அனிந்திதா பவுமிக்கிடம் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அவர் பதிவை நீக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை நிர்வகாம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து, அனிந்திதா பவுமி ஊடகங்களிடம் கூறுகையில், “நான் எனது முகநூல் பதிவில் மருத்துவமனையைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், எனது பதிவை நீக்கச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் அளித்தது, எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை மிரட்டியதோடு, எனது தந்தையிடமும் இது குறித்துத் தெரிவித்து அவரை வைத்தே எனது பதிவை நீக்கவலியுறுத்தியது. ஆனாலும் நான் மறுத்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “திரிபுராவில் கடந்த 2018 ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை ஏற்பட்டுவிட்டது. தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் கருத்துச் சுதந்திரமே இல்லை. நாங்கள்தானே வாக்களித்தோம், பின்னர் ஏன் நாங்கள் அவர்களை விமர்சிக்க கூடாது? எனது சமூக வலைத்தள பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.