ராம்பூர் நீதிமன்றத்தால் நேற்று (2-11-19) விடுவிக்கப்பட்ட இருவரில் ஒருவரான குலாப் கான், சனிக்கிழமை பரேலி மத்திய சிறையிலிருந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் வெளியேறினார். பரேலியின் பஹேரி நகரத்தில் வசிக்கும் 48 வயதான குலாப் கான், “கடவுள் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
நேற்று (2-11-19) சிறையிலிருந்து வெளியேறிய அவர் “பயங்கரவாத தாக்குதலுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, இருந்தும் இந்த வழக்கில் நான் சிக்கவைக்கப்பட்டேன். இந்த வழக்கில் நான் கைது செய்யப்பட்டபோது, எனது வாழ்க்கையும் எனது குடும்பத்தினரும் அழிக்கப்பட்டுவிட்டதாக நினைத்தேன். ஒரு தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோமே என்ற எண்ணம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக, எனக்கு கடுமையான பதட்டம் நிலவியது, நான் மாரடைப்பால் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். நான்சிறையில் இருந்து வெளியேறிய உடன் , கடவுளுக்கு நன்றி செலுத்தினேன். திறந்த வெளியில் சுவாசிப்பது நலமாக உள்ளது. என் வாழ்வை இனி நான் புதிதாகத் தொடங்குவேன்.” என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு பேட்டி அளித்தார் குலாப் கான்.
அப்பாவி குலாப் கான் :
உபி மாநிலத்தை சேர்ந்த குலாப் கான், பஹேரி நகரில் ஒரு வெல்டிங் கடையை நடத்தி வந்த கான், கடந்த பிப்ரவரி 2008 இல் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டார் என்றும் வீட்டில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் என்றும் கூறி போலீசார் கைது செய்தனர்.
“பிப்ரவரி 10, 2008 காலை, பஹேரியில் உள்ள எனது வீட்டிலிருந்து போலீசார் என்னை அழைத்துச் சென்றனர். பரேலி நகரில் சண்டையிட்டதற்காக என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தை தீர்க்க நான் அங்கு வர வேண்டும் என்றும் போலீசார் என்னிடம் கூறினர். கடந்த சில மாதங்களாக நான் பரேலி நகரத்திற்குச் செல்லவில்லை என்று அவர்களிடம் கூறியும் கூட, அவர்கள் என்னை தங்கள் காரில் அழைத்துச் சென்றனர்.’..
காவல் நிலையத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, ஒரு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மாலை வரை என்னை வைத்திருனர். பின்னர், அவர்கள் என்னை ராம்பூரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், அடுத்த நாள் அவர்கள் என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நான் சிறைக்கு மாற்றப்பட்டேன். நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்று அவர்களிடம் கேட்டபோது, சிறைக்குச் சென்ற பிறகு அதை அறிந்து கொள் என்று கூறிவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் நான் எனது குடும்பத்தை சந்திக்க முடிந்தது, ” என்றார் குலாப் கான்.
குலாப் கானை பிரிந்து வாழ்ந்த குடும்பத்தின் நிலை :
கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி நஸ்ரா, தற்போது 17, 15 மற்றும் 13 வயதுடைய தனது மூன்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்க தையல் வேலையை செய்து வந்தார். தனது இருள் சூழ்ந்த வாழ்வை நினைவு கூர்ந்த கான், “இத்தனை ஆண்டுகளில், எங்கள் குடும்பம் சீர்குலைந்தது. நாங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொண்டோம், என் குழந்தைகள் தங்கள் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. நான் என் தாயையும் அத்தையையும் இழந்தேன், அவர்களுடைய இறுதி சடங்கில் கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ” என்றார்.
கான் பஹேரியில் உள்ள தனது வீட்டை அடைந்த பிறகு, அவரைச் சந்திக்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டனர். “இந்த வழக்கில் நீதிமன்றம் என்னை விடுவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் உதவுமாறு நான் அரசாங்கத்திடம் கேட்டு கொள்கிறேன். இதனால் ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்” என்று கான் கூறினார்.
இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட மற்றொரு நபர் – உ.பி.யின் பிரதாப்கரைச் சேர்ந்த முஹம்மது கவ்சரும் குற்றமற்றவர் என்று சனிக்கிழமை பரேலி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் தனது சகோதரருடன் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டடு சென்றார்.
தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இவரை போன்ற 1000 குலாப் கான்கள் சிறைகளில் இன்னமும் வாடி கொண்டு தான் உள்ளனர்.