Muslims Telangana

தெலுங்கானா: பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்க்க காடுகளின் வழியே 70 கி.மீ பயணித்த மருத்துவர் முஹம்மது முக்ரம் !

தெலுங்கானாவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடியின கர்ப்பிணியை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக காடுகளின் வழியே 70 கி.மீ காரில் கொண்டு சென்ற மருத்துவர்.

முஹம்மது முக்ரம் ஒரு மனிதநேயமிக்க மருத்துவர். இவர் பிரசவ நேரத்தை நெருங்கிய ஒரு பழங்குடியின கர்ப்பிணியை , ஒரு ஆஷா(ASHA) பணியாளரின் உதவியோடு தனது காரில் ஏற்றி காடுகளின் வழியாக கொண்டு சென்று உரிய மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் நடக்க தக்க தருணத்தில் உதவியுள்ளார்.

அதிகப்படியான கொரோனா தொற்று நோயாளிகளைக் கையாளுவதில் பெரும் சிரமத்தை மருத்துவத்துறை சந்தித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலம் மஹபூபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் முஹம்மது முக்ரம் தக்க சமயத்தில் உதவியதால் அப்பழங்குடிப்பெண் நல்லமுறையில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.

மஹபூபாபாத் மாவட்டத்திலுள்ள மொத்தம் 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 நிலையங்கள் பழங்குடிப் பிரதேசத்தில் அமைந்துள்ளன.

அம்மாவட்டத்தில் கொலாரம் கிராமத்தில் வசிக்கும் கோயா பழங்குடியினத்தைச் சேர்ந்த, கட்டி மஞ்சுளா (வயது 28) என்ற கர்ப்பிணிக்கு கடந்த செவ்வாய் இரவில் திடீரென பனிக்குடம் உடைந்து பிரசவ வலியில் துடித்தார். தொலைதூரக் கிராமமான கொலாரத்திலிருந்து ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டுமானால் சுமார் 20 கி.மீ பயணிக்க வேண்டும். ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை.

அன்று இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து தனது வீட்டிற்கு மருத்துவர் முஹம்மது முக்ரம் புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் கொலாரம் கிராமத்தில் ஆஷா பணியாளராக உள்ள பத்மா என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது.

இது பற்றி அம்மருத்துவர் கூறுகையில், ” தொலைபேசி அழைப்பின் மூலம் அந்த அவசர நிலையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டேன். இருந்த ஒரே ஆம்புலன்ஸும் வேறொரு சுகாதார நிலையத்திற்குச் சென்றிருந்தது. தாமதத்திற்கோ, மறுசிந்தனைக்கோ இடமின்றி உடனடியாக எனது காரை எடுத்துக் கொண்டு கொலாரம் கிராமத்திற்குச் சென்று கர்ப்பிணியை உரிய மருத்துவ நிலையத்தில் கொண்டு சேர்த்து எனது கடமையை நிறைவேற்றினேன்”, என்கிறார்.

Image

கருவில் இருந்த குழந்தை பனிக்குட திரவத்தை குடித்திருந்ததால், பிரசவித்த உடனேயே குழந்தையின் நுரையீரலில் தேங்கி இருந்த திரவம் கருவி மூலம் உறிஞ்சப்பட்டு அப்பெண் சிசு காப்பாற்றப்பட்டது.

அடர்ந்த காடுகளின் வழியாக ஒற்றை வழித்தடப் பாதையில் மொத்தம் சுமார் 70 கி.மீ பயணித்து, சுகாதார நிலையத்திற்கு மஞ்சுளாவை அவர் கொண்டு வந்து சேர்த்திராவிட்டால் தாயோ, சேயோ அபாயத்தை சந்தித்திருக்கலாம்.

35 வயதான இம்மருத்துவர் ஏற்கனவே 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சிறந்த மருத்துவ அதிகாரி விருதைப் பெற்றவராவார். இம்மருத்துவரின் கடமையுணர்ச்சியையும், தைரியத்தையும் பாராட்டிய அம்மாவட்ட ஆட்சியர் V.P. கவுதம் அவர்கள், ” மருத்துவர் முஹம்மது முக்ரமின் செயல்பாடு மற்ற மருத்துவர்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படுவதால், பிற மருத்துவம் சார்ந்த அவசர கால செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்”, என்றும் தெரிவித்துள்ளார்.