Delhi Union Government

டில்லி முதல்வரின் அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் மோடி அரசு கொண்டு வந்த சட்டம்?

மத்திய அரசு சமீபத்தில் தில்லி தேசிய தலைநகரப் பகுதி திருத்த சட்டம் ஒன்றை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த திருத்த சட்டம் சர்ச்சையாகி இருக்கிறது.

ஏற்கனவே தில்லி மாநில அரசிடம் பெரிய அதிகாரம் என்று இருக்கவில்லை. துணை ஆளுநர் வசம்தான் நிறைய அதிகாரங்கள் இருந்தன. சமீபத்திய சட்டம் அந்த அதிகாரங்களை மேலும் அதிகரித்து இருக்கிறது. தில்லி மாநில அரசு ஒரு டம்மி பீஸ் மட்டுமே என்று ஆக்கி இருக்கிறது மோடி அரசு. இந்தத் திருத்த சட்டம் அமுலுக்கு வந்ததும் துணை ஆளுநர் அனுமதி இன்றி அரவிந்த் கேஜரிவால் ஒரு டீ கூட கடையில் வாங்கி சாப்பிட முடியாது என்ற லெவலுக்கு சட்டம் இருக்கிறது.

பாஜக தொனியில் ராமருக்கு பதிலாக அனுமான், முஸ்லிம்களை தேச துரோகிகளாக சித்தரிப்பது, மோடி போன்ற விளம்பர மோகம் என்று விமர்சனம் செய்யும் அளவிற்கு கெஜ்ரிவால் பயணித்து கொண்டுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஆம் ஆத்மியின் வளர்ச்சி பாஜகவுக்கு உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது. வடக்கே இதர எதிர்க்கட்சிகள் எல்லாம் தேய்ந்து வரும் வேளையில் ஆம் ஆத்மி மட்டும் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆம் ஆத்மி என்றாலே தில்லி மக்களிடம் அன்பு கலந்த ஒரு மரியாதை உணர்வு வரும் அளவுக்கு வியக்கத்தக்க ஐந்து வருட ஆட்சியை கேஜரிவால் கொடுத்திருந்தார். இதன் விளைவாக பஞ்சாப், ஹரியானா என்று இவர்களின் புகழ் பரவிக் கொண்டு இருக்கிறது.

அதெல்லாம் கூடப் பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் சிங்கத்தின் குகையான குஜராத்திற்கு உள்ளேயே நுழைந்து விட்டிருக்கிறார்கள். சமீபத்திய குஜராத் உள்ளாட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்து இருந்தது. அங்கே பாஜகவின் வெற்றிகள் இன்னமும் கணிசமானவையாகவேதான் இருந்திருக்கின்றன; எனினும் ‘நம்ம ஏரியால ஒருத்தன் வந்து சவுண்டு விடுறான்,’ என்பதே பாஜகவை உலுக்கி இருந்திருக்கும். தில்லியின் இருவர் சேர்ந்து கேஜரிவாலின் இறக்கையை வெட்ட முனைந்து விட்டனர்.

இனி தில்லியில் மாநிலத் தேர்தல் வந்தால் ஓட்டுப் போடவே அவசியம் இல்லை. அந்த ஓட்டுக்கு எந்தப் பிரயோசனமும் இருக்காது என்று இந்த சட்டம் ஆக்கி இருக்கிறது. இது அமுலுக்கு வந்து தில்லி அரசு டம்மியானதும் மத்திய அரசுக்கு வசதியாகப் போய் விடும். துணை ஆளுநரை வைத்து இஷ்டத்துக்கு நிர்வாகத்தை சொதப்பலாம். கெட்ட பெயர் எழும் பொழுது அரவிந்த் கேஜரிவால் மேல் பழியைப் போடலாம். கடும் உழைப்பில் அவர் பெற்றிருக்கும் நற்பெயரை நாசம் செய்யலாம். இதர மாநிலங்களில் ஆம் ஆத்மியின் முன்னேற்றத்தை நிறுத்தலாம்.

இந்திய ஜனநாயகத்துக்கு சமீபத்திய காலங்களில் உருவான மாபெரும் அச்சுறுத்தல்களில் முதன்மையானது மோடியின் மத்திய அரசு. இரண்டாவது அமித் ஷாவின் பாஜக.

ஆக்கம்: ஸ்ரீதர் ( சிறு மாறுதல்களுடன்)