Hindutva RSS Saffronization Terrorism

நாடு முழுவதும் குண்டுவெடிப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் ! – அனைத்தையும் போட்டுடைத்த 25 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ஊழியர்!

மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியை தளமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயன்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களின் வீட்டில் 16 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அந்த அமைப்பின் பல மூத்த இந்துதுவ தலைவர்கள் நேரடியாக தொடர்ப்புடையவர்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் ஒருவர் சிபிஐ நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

விண்ணப்பம் தாக்கல் செய்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தவர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவா அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்.

நாடு முழுவதும் குண்டுவெடிப்புக்கு திட்டம்:

குண்டுவெடிப்புக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான” பயங்கரவாத பயிற்சி முகாம் நடத்தப்பட்டது பற்றி ஒரு மூத்த வி.எச்.பி உறுப்பினர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்புகளும், விடுவிப்புகளும்:

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவில் நிகழ்ந்த நான்டேட் குண்டு வெடிப்பு, பர்பானி (2003) மற்றும் பூர்ணா (2004) மசூதிகள் மீது குண்டுகள் வீச்சு என சில ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் 3 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளின் அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் ஏற்கனவே விடுவித்துள்ளன.

வீட்டில் குண்டுவெடிப்பு:

இந்த நான்டேட் குண்டு வெடிப்பு வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்று கூறப்படும் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் வீட்டில் தற்செயலாக குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக சிபிஐ கூறிவிட்டது.

லக்ஷ்மனின் மகன் நரேஷ் மற்றும் வி.எச்.பி செயல்பாட்டாளரான ஹிமான்ஷு பான்சே ஆகியோர் வெடிகுண்டை வடிவமைத்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாக்காத விதத்தில் திடீரென வெடித்ததால் இறந்தனர். அவுரங்காபாத்தில் உள்ள மசூதியை குறிவைக்க இந்த வெடிகுண்டு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என சிபிஐ தெரிவித்தது.

இந்திய ராணுவ வீரர்களால் அளிக்கப்பட்ட பயிற்சி? :

யஷ்வந்த் ஷிண்டே, 1999 ஆம் ஆண்டு முதல் கோவாவில் முழுநேர வி.எச்.பி ஊழியராகப் பணி புரிந்து வரும் ஹிமான்ஷு பான்சே உடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஜம்முவில் ஆயுதப் பயிற்சி பெற பான்சே-வும் அவரது நண்பர்கள் 7 பேரும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சி ‘இந்திய ராணுவ வீரர்களால் அளிக்கப்பட்டது’ என்றும் ஷிண்டே அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார்.

அனைத்தையும் சொல்லத் தயார்:

இந்த வழக்கில் ஷிண்டே அரசு தரப்பு சாட்சியாக இல்லை. ஆனால் அவரது பிரமாண பத்திரத்தில்,

“பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் உட்பட ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் கடந்த 16 ஆண்டுகளாக நான் வேண்டுகோள் விடுத்துவந்தேன். என் வேண்டுகோளுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. எனவே, நான் இவ்வளவு காலமாக எனக்குத் தெரிந்த அனைத்தையும் நீதிமன்றத்தின் முன் தெரிவிக்கத் தயாராக இருக்கிறேன். அனைத்தையும் தெரிந்து கொண்ட நான் இனியும் அமைதி காக்க முடியாது” என ஷிண்டே கூறுகிறார்..

உயிருக்கு அச்சுறுத்தல்:

நான்டேட் நீதிமன்றத்தில் ஷிண்டே-வின் வழக்கறிஞர் சங்கமேஷ்வர் டெல்மேட், ஷிண்டே இப்போது திடீரென ஏன் அனைத்தையும் சொல்ல முன் வந்துள்ளார் என்பது குறித்து ஆரம்பத்தில் எனக்கும் சந்தேகம் இருந்ததாக கூறுகிறார்.

“ எனவே நான் அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அதற்கு தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும். இனிமேலும் அமைதியாக இருக்க அவரது மனசாட்சி அனுமதிக்கவில்லை” என்றும் ஷிண்டே பதில் கூறியதாக அவரது வழக்கறிஞர் சங்கமேஷ்வர் கூறுகிறார்.

30 ஆண்டுகளாக பயணம்:

18 வயதில் ஆர் எஸ் எஸ் அமைப்பில் சேர்ந்த ஷிண்டேவுக்கு தற்போது வயது 49.

“இப்போது இந்த அனைத்து இந்து அமைப்புகளிலிருந்தும் நான் விலகி இருக்க வேண்டியதாயிற்று. அவர்கள் இனி ‘இந்து மதத்திற்காக’ உழைக்கவில்லை. அவர்கள் ஆளுங்கட்சியினரின் கைப்பொம்மைகளாக உள்ளனர்” என ஷிண்டே கூறுகிறார்.

ஷிண்டே ஆர்எஸ்எஸ் அமைப்பில் எந்த அளவிற்கு மூழ்கியவர், நம்பிக்கை மிகுந்த ஒருவராகவும் இருந்தார் என்பதை விளக்குவதற்கு, அவரது இளமைக்காலத்தில் அவர் பங்கேற்ற பல நிகழ்வுகளை பட்டியலிடுகிறார்.

பரூக் அப்துல்லாவை தாக்கிய ஷிண்டே:

1995 ஆம் ஆண்டில், ஜம்முவில் உள்ள ரஜோரிக்கு சென்றபோது, பரூக் அப்துல்லாவைத் தாக்கியதற்காக ஷிண்டே பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பின்னர் ஷிண்டேவை குற்றமற்றவர் என விடுவித்த நிலையிலும், இந்த பிரமாண பத்திரத்தில் பரூக் அப்துல்லா மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டு, பொறுப்பேற்கிறார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, ஷிண்டே ஒரு “பிரசாரக்” ஆக பயிற்சி பெற்றார். இறுதியில் 1999 இல் பஜ்ரங் தளத்தின் மும்பை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

ஷிண்டே தனது வாக்குமூலத்தில், மாலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் உட்பட மூன்று நபர்களை புனேவில் உள்ள சிங்ககாட்டில் ஆயுதப் பயிற்சி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஏற்கவில்லை. ஆயினும், பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே நான் அந்த பயிற்சியில் பங்கேற்றேன்” என்று ஷிண்டே கூறுகிறார்.

தொடர் குண்டு வெடிப்புகள்:

2000-களின் முற்பகுதியில் மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகள், இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முதல் நிகழ்வுகளாகும்.

“காவி பயங்கரவாதம்” :

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் (2007), அஜ்மீர் ஷெரீப் தர்கா (2007) மற்றும் மாலேகான் (2008) ஆகிய இடங்களில் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளும் தீவிரவாத வலதுசாரி குழுக்களின் உறுப்பினர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

2010 ஆம் ஆண்டில், அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தீவிர இந்துத்துவா குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை ” காவி பயங்கரவாதம் ” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்பு:

பர்பானி குண்டுவெடிப்பு மற்றும் 2004 ஜல்னா மசூதி குண்டுவெடிப்பு இரண்டும் நான்டேட் வழக்கின் அதே செயல் முறையைப் பின்பற்றியதாக ஷிண்டே கூறுகிறார். ஆனால் அவர் நான்டேட் வழக்கில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார்.

காரணம்.. “அந்த வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றங்கள் ஏற்கனவே விடுவித்துள்ளன. எனவே நீதிமன்றத்தில் நடந்து வரும் நான்டேட் வழக்கில் மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றார்.

மேலும், சிபிஐ வழக்கறிஞர் (அரசு வழக்கறிஞர்) மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் அவர்களின் பதிலைக் கேட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் டெல்மேட் தெரிவித்துள்ளார்.

நாம் செய்ய வேண்டியது:

இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது. பயங்கரவாதிகளை உருவாக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி கலவரங்களை உருவாக்கும் அமைப்புகளை தடை செய்து, ஒழித்துக்கட்ட உழைக்கும் மக்கள் படையாய் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

எனினும் இது குறித்தான செய்தி பெருமளவில் வெளியாகவில்லை. தொலைக்காட்சி ஊடகங்களும் எதிர்பார்த்தவாரே முற்றிலுமாக மூடி மறைத்து விட்டன. இதுவரை முழுமையாக இந்த ஆக்கத்தை படித்திருந்தால், தயவு செய்து இதை மற்றவருக்கும் பகிரவும்.

நன்றி : தி வயர்