பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை செய்வதை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள சமர் அர்பிட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி பாலஸ்தீனிய மனித உரிமைகள் மற்றும் சமூக அமைப்புகள் தெருக்களிலும் சமூக ஊடகங்களிலும் அணிதிரண்டு வருகின்றன.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள சமர் அர்பிட்டின் உயிரைப் பாதுகாக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) உடனே தலையிட்டு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர்கள் குறிப்பாக அழைப்பு விடுத்துள்ளனர்.
புகைப்படம்: ஆக்டிவ்ஸ்டில்ஸ்
44 வயதான சமர் மூன்று குழந்தைகளின் தந்தை.செப்டம்பர் 25 புதன்கிழமையன்று சமர் அர்பிட் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் , தனது பணியிடத்தில் இருந்து இஸ்ரேலிய சிறப்புப் படையினரால் இழுத்து செல்லப்பட்டார். கைதின் போது துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சமரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கொடூரமான இந்த கைது நடவடிக்கைக்கு பின்னல் , அர்பிட் ஜெருசலேமில் உள்ள அல்-மஸ்கோபியா விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மையம் அவரது வழக்கறிஞரை சந்திப்பதைத் தடை செய்தது.விசாரணை மையத்தில் ஷின் பெட்டி (இஸ்ரேலிய உளவுத்துறை) அதிகாரிகளால் அவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.அடமீர்- கைதிகளின் ஆதரவு மற்றும் மனித உரிமைகள் சங்கம் சமர் அர்பிட்டிர்க்கு சட்ட ரீதியிலான உதவிகளை செய்து வருகிறது.
சமர் கடுமையான வலி, தொடர்ச்சியான வாந்தி மற்றும் உணவை உட்கொள்ள இயலாமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட மறுநாளே, தனது வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சமர் செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் உள்ள ஹடாஸா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் இது குறித்து அவரது வழக்கறிஞரோ அல்லது அவரது குடும்பத்தினரோ செப்டம்பர் 28 அன்று மறுநாள் வரை அறிவிக்கப்படவில்லை.
அதே இரவில், செப்டம்பர் 28 அன்று, இஸ்ரேலிய உளவுத்துறையின் ஷின் பெட் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டது . அதில் சமரை விசாரிக்க தீவிரமான மற்றும் விதிவிலக்கான பல யுக்திகளை கையாண்டதாக தெரிவித்துள்ளது. பல மனித உரிமை அமைப்புகளால் இவை சித்திரவதை என வகைப்படுத்தப்படுகின்றன.
செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் ஆர்பிட்டை சந்திக்க அவரது வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஆர்பிட் , மயக்கமான நிலையில் பல விலா எலும்புகள் உடைந்து அவரது உடல் முழுவதும் காயங்கள் கொண்ட நிலையில் இருந்தார் என்றும் அவர் கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகியுள்ளார் ” என்றும் அவரது வக்கீல் தெரிவித்தார்.
அக்டோபர் 1 ம் தேதி, எருசலேமில் உள்ள ஹடாஸா மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூடி, சமரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரினர். இந்த போராட்டத்தை இஸ்ரேலிய போலீசார் ஒடுக்கி அதில் பங்குகொண்ட இருவரை கடுங்காவலில் எடுத்து அழைத்து சென்றுவிட்டனர்.
பாலஸ்தீனியர்களின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் அடக்குமுறை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வருகிறது.பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புகள் 2019 ஆகஸ்டில் மட்டுமே குறைந்தது 470 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படைகளால் கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பரில் 500 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய படைகளால் கடுங்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.