குவஹாத்தி, மார்ச் 30: மியான்மரில் அதிகரித்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு இடையே, ஒரு ரோஹிங்கியா சிறுமியை மியன்மார் நாட்டிற்கு அதிகாரபூர்வமாக திருப்பி அனுப்ப உள்ளது மோடி அரசு. இது குறித்து அசாம் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி அமைந்த பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் ரோஹிங்கியா சிறுமிக்கு வயது 14!.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அச்சிறுமி, சில்சார் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான நிவேதிதா நாரி சங்ஸ்தாவின் பராமரிப்பில் இருந்து வந்தார்.
மனிதாபிமானமா? அப்படின்னா?:
“தன்னார்வ தொண்டு நிறுவனம், சிறுமியை குழந்தைகள் நலக் குழு (CWC) முன்னிலையில், அசாம் போலீசாரிடம் ஒப்படைத்தது. சிறுமி இன்று மோரேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், நாளை மியான்மர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் ”என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அவர் உள்துறை அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் கவனத்தை மாநில அதிகாரிகள் மூலம் ஈர்த்திருந்தார். அவர் தனது பெற்றோருடன் இணையும் விதமாக மியான்மருக்கு பதிலாக பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கல்நெஞ்சம் :
அவரது பெற்றோர் இனப்படுகொலைக்கு பயந்து மியான்மரை விட்டு வெளியேறிய பின்னர் பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சிறுமியை மியான்மருக்கே திருப்பி அனுப்ப மோடி அரசு உறுதி பூண்டது.
“வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் பிறநாட்டவரை திருப்பி அனுப்பும் நெறிமுறையின்படி, ஒரு நபரை பிறந்த நாடு தவிர வேறு எங்கும் திருப்பி அனுப்ப அனுமதி இல்லை. மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையே நாங்கள் பின்பற்றுகிறோம், ”என்று சில்சார் காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
2018 முதல், 39 ரோஹிங்கியா பிரஜைகள் அசாம் மாநிலத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்போது அசாம் மாநிலத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா பிரஜைகள் தேஜ்பூர், சில்சார் மற்றும் கோல்பாரா உள்ளிட்ட பல்வேறு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.