பாஜக ஆளும் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மல்லேனு கிராமத்தில் (ஹிரியூர் தாலுகா) செவ்வாய்க்கிழமை மாலை இந்துத்துவாவினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து பைபிளை தீ வைத்து எரித்துள்ளனர்.
ஏகாந்தம்மா என்ற 62 வயது மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், வீட்டில் ஏன் பிரார்த்தனை நடத்துகிறீர்கள் என அங்கிருந்தவர்களை மிரட்டி பைபிளை எரித்துள்ளனர். இது குறித்து இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
சித்ரதுர்கா எஸ்.பி., பரசுராமன் கூறுகையில், ” 62 வயதான மூதாட்டி ஏகாந்தம்மா உடல்நிலை சரியில்லாததால், ஹிரியூரில் உள்ள தேவாலயத்திற்க்கு சென்றுள்ளார். உடல்நிலை குறித்து பாதிரியார் ராம நாயக்கிடமும் தெரிவித்துள்ளார் மூதாட்டி. அதனை தொடர்ந்து தேவாலயத்தில் இருந்தவர்கள் மாலை நேரத்தில் ஏகாந்தம்மா வீட்டிற்கு சென்று பிரார்த்தனை நடத்தினர். ஜெபம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, குறைந்தது நான்கு பேர் சலசலப்பை உருவாக்கி, வீட்டில் ஏன் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்” என்றார்.
“ஏகாந்தம்மா இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை, ராம நாயக்கையும் அழைத்துப் பேசியுள்ளோம், புகார் அளிக்க வேண்டுமா என்று மேலும் கேட்போம், இல்லையென்றால் தடுப்பு வழக்குப் பதிவு செய்வோம்” என்று எஸ்பி மேலும் கூறினார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் என பப்ளிக் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த கிறிஸ்தவ குடும்பம் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இந்துத்துவவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.