Crimes against Children Karnataka

கர்நாடகா: தின்பண்டங்களை திருடியதற்காக சிறுவனை சித்திரவதை செய்து கொன்ற கடை உரிமையாளர் !

மார்ச் 16 அன்று கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள கடையில் இருந்து தின்பண்டங்களை திருடியதாக 10 வயது சிறுவனை கடை உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்திரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனுக்கு சித்திரவதை:

ஹரிஷய ஹிரேமத் என்ற அந்த சிறுவனை ஒரு அறையில் பூட்டி, கல்லில் கட்ட வைத்து, கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த திங்களன்று மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளான் சிறுவன்.

ஹனகல் தாலுகாவில் உள்ள உபனாசி கிராமத்தில் இந்த கடை அமைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கடை உரிமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

சிறுவனை தேடி அலைந்த தாய் தந்தை:

சிறுவனின் தந்தை நாகயா ஹிரேமத்தின் கூற்றுப்படி, நீண்ட நேரமாகியும் சிறுவன் திரும்பி வராததால், பல்வேறு இடங்களிலும் மகனை தேடி அலைந்துள்ளார் தந்தை. அச்சமயம் சிறுவன் கடை உரிமையாளரின் கட்டுபாட்டில் வீட்டில் அடைக்கபட்டிருந்ததாக தந்தை தெரிவிக்கிறார். பின்னர் இதை அறிந்து கொண்ட தந்தை கடை உரிமையாளரிடம் பலமுறை கெஞ்சி கேட்டும் சிறுவன் விடுவிக்கப்படவில்லை.

சிறுவனின் தாயிற்கு நடந்த கொடூரம்:

பிற்பகல் 3 மணியளவில், சிறுவனின் தாய் ஜெயஸ்ரீ கடை உரிமையாளரிடம் சென்று சிறுவனை விடுவிக்கும்படி அவரிடம் கெஞ்சினார். மாலை 5 மணிக்கு திரும்பி வரும்படி கடை உரிமையாளர் கூறியுள்ளார் . ஜெயஸ்ரீ திரும்பி வந்தபோது, சிறுவன் வீட்டு அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட குழியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டுள்ளார், சிறுவனின் முதுகில் ஒரு கனமான கல் கட்டப்பட்டிருந்தது.

ஆவேசமடைந்த ஜெயஸ்ரீ சிவருத்ரப்பாவுடன் சண்டையிட்டார், ஆனால் அவர், அவரது மகன் குமார், அவர்களது உறவினர்கள் பிரவீன் கரிஷெட்டர் மற்றும் பசவன்னேவா கரிஷெட்டர் ஆகியோர் தாயை அடித்து, பினனர் சிறுவனை விடுவித்தனர்.

மருத்துவமனையில் சிறுவன்:

கடுமையாக காயமடைந்த சிறுவனின் நிலை அதே இரவில், மோசமடையத் தொடங்கியதால், ஹவேரியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முதலுதவிக்குப் பிறகு, அவரை ஹப்பல்லியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுமாறு மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தினர். சிறுவன் திங்கள்கிழமை மாலை உயிர் இழந்தார். இறப்புக்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளவும், தப்பி ஓடியவர்களை கைது செய்யவும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எப்.ஐ.ஆர் கூட பதியவில்லை:

குடும்பத்தாரின் துன்பம் இத்தோடு முடிவடையவில்லை. சிறுவனின் பெற்றோரு போலீசாரை அணுகியபோது ஆதூர் போலீசார் புகார் எடுக்க மறுத்துவிட்டதாக நாகய்யா குற்றம் சாட்டுகிறார். ஆனால் காவல்துறையினர் நாகயாவிடமிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கையை பெற்று கொண்டதாக கூறி, அவர்களின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றனர். எனினும் சிறுவன் இறந்த பின்னர் திங்கள்கிழமை மாலையில் தான் எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்போம் – போலீசார்:

“சிறுவனின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த வழக்கை விசாரிக்கவும், தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்யவும் ஹங்கல் வட்டம் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளோம். காவல்துறை அதிகாரிகள் புகார் பெற்றுக்கொள்ள மறுத்தது உறுதி செய்யபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.” என ஹவேரி போலீஸ் சூப்பிரண்டு கே.தேவராஜு கூறியுள்ளார்.