Assam Election Commission

90 பேர் கொண்ட வாக்குச்சாவடியில் 171 ஓட்டுகள் பதிவு; தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !

ஹாஃப்லாங் (அஸ்ஸாம்): அசாமின் டிமா ஹசாவோ மாவட்டத்தில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மொத்தம் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கடும் குளறுபடி ஏற்பட்டதை அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.

ஏப்ரல் 1 ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற ஹஃப்லாங் தொகுதியில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது.

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி, 107 (ஏ) கோட்லீர் எல்பி பள்ளியில் உள்ள இவ்வாக்குச் சாவடியின் ஐந்து வாக்கெடுப்பு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இங்கு மருவாக்கு பதிவு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிமா ஹசாவோவின் துணை ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி இடைநீக்கம் உத்தரவு ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது, எனினும் இது திங்கள்கிழமை காலை தான் வெளிச்சத்திற்கு வந்தது.

வாக்காளர்கள் பெயர் பட்டியலில் 90 பெயர்கள் மட்டுமே இருக்க,171 வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (ஈ.வி.எம்) பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் பி.டி.ஐ. யிடம் தெரிவித்தனர்.

“இக்கிராமத்தின் தலைவர் வாக்காளர்களின் பட்டியலை ஏற்க மறுத்து, அவரின் சொந்த பட்டியலைக் கொண்டுவந்தார். பின்னர், அந்த பட்டியலின் படி கிராம மக்கள் வாக்களித்தனர்,” என்று ஒரு அதிகாரி வினோதமான விளக்கத்தை கூறினார்.

கிராமத் தலைவரின் கோரிக்கையை வாக்குப்பதிவு அதிகாரிகள் ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் வாக்குச் சாவடியில் பாதுகாப்புப் பணியாளர்கள் யாராவது இருந்தார்களா ? அவர்கள் பங்கு என்ன ? என்பன போன்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.