Election Commission

ஆதார் எண்களை வாக்காளர் அட்டையுடன் இணைக்க சட்ட அமைச்சகம் அனுமதி !

ஆதார் எண்களுடன் வாக்காளர் அட்டைகளை இணைப்பதற்கான பணியை மீண்டும் துவக்குவதற்கான சட்ட அதிகாரங்களைக் கோரி தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்தை நாடியுள்ளது.

அதனை தொடர்ந்து இந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளதாகவும், எனினும் தரவுகளின் “திருட்டு, இடைமறிப்பு மற்றும் ஹைஜேக்” ஆகியவற்றைத் தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைக்க அனுமதி கோரி கடிதம்:

கடந்த ஆகஸ்ட் மாதம், சட்ட செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 மற்றும் ஆதார் சட்டம், 2016 ஆகியவற்றில் திருத்தங்களை முன்மொழிந்தது தேர்தல் ஆணையம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, புதிகாக வாக்காளர் பட்டியலில் சேர விரும்புவோரிடமும், ஏற்கனவே பதிவு செய்தவர்களிடமும் ஆதார் எண்களை தேர்தல் பதிவு அதிகாரி (ERO) கேட்டு பெறலாம் .

“வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைப்பது நகல் உள்ளீடுகள் மற்றும் போலி வாக்காளர்களை களைய உதவும். இது தேசிய நலன் சார்ந்த ஒரு விஷயம்” என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது. எனினும் சிலரால் ஆதார் எண்களை வழங்க இயலாமல் போனாலும் கூட அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று முன்மொழியப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

சட்ட செயலாளருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம்

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணி நிறுத்தம்:

கடந்த பிப்ரவரி 2015 இல், எச்.எஸ் பிரம்மா தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, தேர்தல் புகைப்பட அடையாள அட்டைகளுடன் (ஈபிஐசி) ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் முதலில் ஆரம்பித்தது. எனினும் அதே ஆண்டு ஆகஸ்டில், பொது விநியோக முறைமை (பி.டி.எஸ்), எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே ஆதார் பயன்பாட்டை அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் இந்த பணி நிறுத்தப்பட்டது. அச்சமயம் ஏற்கனவே 38 கோடி வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைத்திருந்தது தேர்தல் ஆணையம்.

மீண்டும் கோரிக்கை:

எனினும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவில், ‘தனியுரிமைக்கான உரிமை’ ஒரு அடிப்படை உரிமை என்றாலும், ஆதார் சேகரிப்பதற்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு குறிப்பிட்ட சட்டம் இருந்தால் அல்லது மாநில நலன் சம்பந்தப்பட்டிருந்தால் நீதிமன்ற உத்தரவை தளர்த்தி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் இடம்பெற்ற இந்த வாசகம் தான்ஆதார் உடன் வாக்காளர் அட்டைகளை மீண்டும் இணைப்பதற்கான சட்ட அதிகாரங்களை சட்ட அமைச்சகத்திடம் வேண்டுவது என்ற முடிவை தேர்தல் ஆணையம் எடுக்க அடிப்படையாக அமைந்தது என்பது குறிபிடத்தக்கது.