“1,500 முதல் 2,000 நபர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வடகிழக்கு டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரம் அவர்கள் தங்கவைக்கப்பட்டு, திட்டமிட்ட ஒரு வன்முறை சம்பவத்தை அவர்கள் கட்டவிழித்து விட்டுள்ளனர்” என பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
எங்கள் கள ஆய்வின் முடிவில் இது திட்டமிடப்பட்ட வன்முறை சம்பவம் என்பது தெளிவாகியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து பலர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினரும் உளவுத்துறையினரும் தான் மேலதிகமாக விசாரணை செய்ய வேண்டும்.
மாநிலத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பெரும்பாலும் பள்ளிகளில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் உடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பெற்றுள்ளோம்.
போலீசார் காரணம்:
டெல்லி போலீசார் மக்களை பாதுகாத்ததாக கூறுகிறார்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு “அவர்கள் யாரையும் , எதனையும் பாதுகாக்கவில்லை . மக்களையும் மக்களின் சொத்துக்களையும் எரிந்து நாசமாகிட அவர்கள் அனுமதித்துள்ளனர்.” என அவர் பதிலளித்தார்.
உணவு தேவை :
டெல்லி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பால் காய்கறிகள் போன்றவை பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது அதில் தட்டுப்பாடு இல்லை. எனினும் அவர்கள் மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கே சென்று இழந்த பொருட்கள், வீடு, கடை என அனைத்துக்கும் உரிய வழி வகைகள் செய்யப்பட்டு வாழ்க்கையை மீண்டும் துவங்குவதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண தொகையானது போதுமானதாக இல்லை, அதை அரசாங்கம் அதிகப்படுத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என தில்லி சிறுபான்மையினருக்கான ஆணையத்தின் தலைவர் ஜபருல் இஸ்லாம் மேலும் தெரிவித்தார்.