Delhi Fact Check Muslims

டெல்லி: ‘பள்ளியில் பாங்கு சொல்லக்கூடாது என சொல்லும் போலீசார்’ – உண்மை நிலவரம் என்ன?

டெல்லி: டெல்லியின் பிரேம் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு போலீசார் அஸான் (பாங்கு) தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களுக்குச் சொல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புனித ரம்ஜான் மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணைக்கப்பட்டுள்ள காணொளியில் இரண்டு போலீசார் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட கூடாது என்று கூறுகின்றனர். அவர்களை எதிர்கொண்ட பெண்மணிகள் அரசு தான் பள்ளிவாசலில் பாங்கு சொல்வதற்கு தடை விதிக்கவில்லையே. பிறகு இது யார் பிறப்பித்த உத்தரவு என தைரியமாக காவலர்களிடம் கேட்கின்றனர் ? அதற்கு “என்னுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள், பிரேம் நகர் காவல் நிலையத்தில் எல்ஜியின் உத்தரவு உள்ளது, போய் பார்த்துக்கொள்ளுங்கள். என்னுடன் வாதிடுவதில் அர்த்தமில்லை. ” என ஒரு காவலர் பதில் அளிக்கிறார்.

டெல்லியில் முஸ்லிம்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகின.இந்நிலையில் இது குறித்து டெல்லி சிறுபான்மையினர் ஆணையம் (டி.எம்.சி) டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதியது. எனினும் கடிதத்திற்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என டி.எம்.சி தெரிவித்துள்ளது.

உண்மை நிலவரம் என்ன?

லாக்டவுன் காலத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, மூன்று பேருக்கு மிகாமல் அனுதினமும் தொழுவதற்கு மத்திய அரசே அனுமதி வழங்கியுள்ள நிலையில், பள்ளியில் பாங்கு கூடாது என கூறியுள்ளது டெல்லி போலீசார் தான். செய்தி பெரிதாகவே, வீடியோவில் உள்ள போலீஸ்காரர்களை அடையாளம் காண விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்தார்.

மேலும் பள்ளியில் பாங்கு கூடாது என உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் டெல்லி காவல்துறை தெளிவுபடுத்தினர்.

ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலை 1:00 மணி அளவில் டெல்லி காவல்துறையினர் பதிவிட்ட ட்வீடில், தேசிய பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதல்களின்படி அஸான் சொல்லி கொள்ளலாம் என்று தெளிவாகக் தெரிவிக்கப்பட்டது.

“அஸானுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் லாக்டவுன் நிலையில், மசூதிகளில் வழிபாட்டாளர்கள் தொழுகவோ அல்லது வேறு எந்த மத இடத்திலும் வழிபாட்டுக்காக மக்களை ஒன்று கூட்டவோ முழுமையான தடை உள்ளது.’ என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தெளிவுபடுத்தினார்.

டி.சி.பி-லெவல் விசாரணை:

வீடியோவில் உள்ள போலீசார் விவகாரத்தில், அதிகாரப்பூர்வமான டி.சி.பி-லெவல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்கள் நமாஸை மற்றும் செஹரியை வீட்டிலேயே செய்து கொள்ள வேண்டும் என டெல்லி போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி அனில் மிட்டல் தெரிவித்தார்.