“என் மகன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; ஆனால் அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” என கண்களில் வழிந்தோடும் கண்ணீரை அடக்க முடியாமல் பேசுகிறார் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சுஹைல் அஹமத்.
கடந்த டிசம்பர் 21-ம் தேதி பிஹார் மாநிலத்தில் CAA வை எதிர்த்து புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அந்த போராட்டத்தின் போது CAA ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இரு தரப்புக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடந்தது. ஜீன்ஸ், ஸ்வெட்டர் அணிந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தி போராட்ட களத்தில் அமிர் ஹன்ஜிலா நிற்கும் வீடியோ உள்ள நிலையில், இந்த கல்வீச்சு சம்பவத்தின்போது காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன அமீர் 10 நாட்களுக்குப் பிறகு, அருகில் இருந்த நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய தலை நசுக்கப்பட்டிருந்தது; அவருடைய நெஞ்சிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன.
“கையில் தேசிய கொடியை ஏந்தியவனை கொல்பவர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள்?” எனக் கேட்கிற சுஹைல், “போராட்ட படங்களைப் பாருங்கள். அவன் பெருமையுடன் தேசிய கொடியை ஏந்தியுள்ளான். அவன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டான் என்பது அனைவரும் அறிந்ததே” என்கிறார்.
பத்தாவது படித்த அமீர், பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த டிசம்பர் 21-ம் தேதி பணிக்குச் சென்ற அவர், அன்று CAA வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.
மதியம் வரை குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அவரை, அதன்பின் தொடர்பு கொள்ள இயலவில்லை. இரவு 8 மணியளவில் ஆங்காங்கே போராட்டத்தில் கலவரம் வெடித்ததாக வந்த செய்தியை அடுத்து, அவருடைய குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் அமீர். அவரை கொன்றதாக நாகேஷ் சாம்ராட் (23), விகாஸ் குமார் (21) ஆகியோரை கைது செய்துள்ளது பிஹார் காவல்துறை. இவர்கள் ‘இந்து சமாஜ் சங்காதன்’ என்ற இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
“அமீர் போராட்ட இடத்தை விட்டு வெளியேறியபோது, அவரை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்று அடித்து கொன்றுள்ளனர். உடல்கூராய்வு அறிக்கை செங்கல்லால் அவர் தாக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டதை கூறுகிறது.” என்கிறார் போலீஸ் அதிகாரி.
இந்த படுகொலை தொடர்புடையதாக கைதான மேலும் ஐவர், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் காவல்துறை தரப்பு கூறுகிறது.
அமீரைக் கொன்ற முதன்மை குற்றவாளிகளான சாம்ராட்டும், குமாரும் டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில், போலீஸ் இந்துக்களை டார்ச்சர் செய்வதாகவும் அனைத்து இந்துக்களும் புல்வார் சாரீப்புக்கு வரவேண்டும் எனவும் தான் ஒரு இந்து என்ற வகையில் அங்கே வந்துவிட்டதாகவும் கலவரத்தை தூண்டும் விதத்தில் அவதூறாக பேசியிருக்கிறார்கள்.
“வெளியிலிருந்து வந்து இதுபோல கலவரங்கள் மூலம் வன்முறையை தூண்டுவது கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவருகிறது” என்கிறது காவல்துறை.
டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பேரணியாக சங்கத் மொகல்லா பகுதியில் சென்றபோது ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த கும்பலால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தை போலீஸ் தடுக்க முயற்சிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
“சங்கட்டில் குடியுரிமைத் திருத்தத்திற்கு ஆதரவாக 100 பேர் கூட இல்லை, ஆனால் அவர்களிடம் செங்கல், கற்கள் மற்றும் பல துப்பாக்கிகளும் இருந்தன. 10,000 பேர் கொண்ட ஒரு அணிவகுப்பை நிறுத்துவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.” என்று பெயர் தெரிவிக்க விரும்பாத உள்ளூர்வாசி ஒருவர் கூறியுள்ளார்.
போலீஸ் ஏன் தடுக்கவில்லை என டெலிகிராப் நாளிதழ் நிருபர் கேட்டபோது, “எங்கள் பெயரை இழுக்க வேண்டாம். அங்கே நடந்த கலவரத்துக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.
நன்றி: டெலிகிராப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், கலைமதி (வினவு )