கண்ணூர்: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாகனம் மீது பாஜகவினர் தாக்கியதாக பிலதாரா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த அப்பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மலையாள ஊடகமான மாத்ரபூமி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் :
இந்த சம்பவம் (நேற்று) திங்கள்கிழமை பயன்னூர் அருகே உள்ள எடாட் எனும் இடத்தில் நடந்துள்ளது. வாகனம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண்ணான நசிலா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கள்ளியாசேரியில் நடைபெற்ற பாஜக ரோட்ஷோ வழியாக வாகனம் சென்றதாகக் கூறி கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அங்கிருந்த உள்ளூர்வாசிகள் தலையிட்டு காயமடைந்த நசிலாவை உடனே வேறு வாகனம் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கூடிய கட்சியினரை போலீசார் கலைத்தனர். மேலும் வாகனத்தை இடைமறித்து தாக்குதல் நடத்திய காரனத்தால் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.