Assam NRC

அசாம் என்.அர்.சி தரவுகள் இணையத்தளத்தில் இருந்து மாயம் ! அசாம் மக்கள் அதிர்ச்சி !

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) சேர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட நபர்களின் விவரங்களைக் காட்டும் தரவு, கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்போது அந்த தரவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து திடீரென மாயமாகி உள்ளது.

தரவுகள் பதிவேற்றப்பட்ட இணையத்தளம் :

என்.ஆர்.சி.யில் இந்திய குடிமக்களை விலக்குவது மற்றும் சேர்ப்பது பற்றிய முழுமையான விவரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் 2019 ஆகஸ்ட் 31 அன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ‘www.nrcassam.nic.in’ இல் பதிவேற்றப்பட்டது. தற்போது இந்த தரவுகள் தான் மாயமாகி உள்ளது.

எதிர்க்கட்சி குற்றச்சாட்டு:

உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து ஆன்லைன் தரவு திடீரென காணாமல் போனது குறித்து அசாம் எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சாய்கியா, பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருக்கு (Registrar General and Census Commissioner) கடிதம் அனுப்பியுள்ளார்.

என்.ஆர்.சி ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட தாமதமான அணுகுமுறை காரணமாக மேல்முறையீட்டு செயல்முறை கூட தொடங்கப்படாதபோது தரவுகள் மறைந்து போயுள்ளது. ஆன்லைன் தரவு திடீரென காணாமல் போயுள்ளது ஏதோ தவறு நடக்கிறதோ என்று சந்தேகிக்க வைக்கிறது. மேலும் இது மாண்புமிகு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாகும் ”என்று சைகியா பதிவாளர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்.ஆர்.சி ஆணையம் விளக்கம்:

“என்.ஆர்.சி தரவுகள் மேகக் கணிமையில் (cloud storage) சேமிக்கப்பட்டது. ஆனால், விப்ரோ வழங்கிய கிளவுட் ஸ்டோரேஜின் சேவை காலம் காலாவதி ஆகிவிட்டது. மேலும் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் எந்த ஒருங்கிணைப்பாளரும் பொறுப்பேற்காமல் உள்ளதால் சந்தா புதுப்பித்தல் செய்யப்படவில்லை.

புதிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பேற்ற பிறகு (முழுமையாக தரவுகள் கிடைக்கப்பெறும் ), புதுப்பித்தல் செயல்முறை நடந்து வருகிறது, ஒரு சில நாட்களில் தரவு ஆன்லைனில் காணக்கிடைக்கும்” என என்ஆர்சி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்:

என்.ஆர்.சி தரவுகள் மாயமானது குறித்து, “சில தொழில்நுட்ப சிக்கல்கள் மேகக்கணிவில் ஏற்பட்டுள்ளது. அசாமில் உள்ள என்.ஆர்.சி தரவு பாதுகாப்பாக தான் உள்ளது. தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்” என உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மெத்தன போக்கு:

ஐ.டி நிறுவனமான விப்ரோவால் என்ஆர்சி தரவுகளுக்கான கிளவுட் சேவை வழங்கப்பட்டது, அவற்றின் ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபர் 19 வரை இருந்தது. இருப்பினும், இது முந்தைய ஒருங்கிணைப்பாளரால் புதுப்பிக்கப்படவில்லை. எனவே டிசம்பர் 15 முதல் என்ஆர்சி யின் தரவுகள் விப்ரோவால் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டது என என்.ஆர்.சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிடேஷ் தேவ் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து ஜனவரி 30 ம் தேதி நடந்த கூட்டத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாநில ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்யப்பட்டதாகவும், மேலும் இது தொடர்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் விப்ரோவுக்கு கடிதம் எழுதியதாகவும் சர்மா கூறியுள்ளார்.

“விப்ரோ தரவை நேரலை செய்தவுடன், அடுத்த 2-3 நாட்களில் பொதுமக்களுக்கு கிடைக்க பெரும் என நாங்கள் நம்புகிறோம்” என்று சர்மா கூறினார்.

பல ஆண்டுகளாக, ஆயிரம் கோடிக்கும் மேலாக செலவு செய்து சேகரிக்கப்பட்ட தரவுகள், புதுப்பிக்கப்படாமல் மாயமாகியுள்ளது, என்ஆர்சி ஆணையத்தின் லச்சனத்தை காட்டுகிறது என அசாம் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.