Discrimination Hindus Hindutva Islamophobia Muslims Uttar Pradesh

உ.பி : பல சமய பிரார்த்தனையில் முஸ்லிம் பிரார்த்தனையும் இணைக்கப்பட்டதை அறிந்து பள்ளிக்கு சீல் வைப்பு !

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அனைத்து மத வழிபாட்டின் ஒரு பகுதியாக இஸ்லாமிய பிரார்த்தனைகளையும் இணைத்துள்ளது தொடர்பாக விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா குழுக்களின் புகார் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பள்ளியின் இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வுகளை புண்படுத்தல்) மற்றும் மதமாற்ற தடைச் சட்டம் 2021 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கான்பூரில் உள்ள புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இந்துத்துவாவினரின் விஷம பிரச்சாரம் காரணமாக இரண்டு நாட்களாக மூடப்பட்டுள்ளதாக தி வயர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யார் புகார் அளித்தது?:

கான்பூரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச்சா தலைவரான கீதா நிகாமின் கோரிக்கையின் பேரில் ரவி ராஜ்புத் என்பவர் காவல்துறையில் புகார் அளித்ததாக அவரே கூறுகிறார். வழக்குப் பதிவு செய்ய நானே காவல் நிலையத்திற்குச் சென்றிருக்க மாட்டேன், பாஜக தலைவரின் கோரிக்கையால் தான் சென்றேன் என்கிறார் அவர். 35 வயதான ரவி ராஜ்புத்தின் மகன் இந்த பள்ளியில் படித்து வருகிறார்.

ரவி ராஜ்புத்

பள்ளியை மூடுவது நோக்கம் அல்ல, இஸ்லாமிய பிரார்த்தனை நிறுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம். என் மகனின் கல்வி பாதிக்கப்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை.” என ரவி கூறுகிறார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி, ராஜ்புத்தின் புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி நிஷாங்க் சர்மா தெரிவித்துள்ளார்.

“சிக்ஷா (கல்வி) ஜிஹாத்”

இந்துத்துவா குழுவின் புகாரில், “மாணவர்களை மத மாற்றம் செய்ய பள்ளி மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களை இஸ்லாமிய பிரார்த்தனையை செய்ய வைப்பதன் மூலமாக “சிக்ஷா (கல்வி) ஜிஹாத்” நடத்தப்படுகிறது என புகாரில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கு சீல்:

பள்ளியின் மற்ற கிளைகளுக்கும் சீல் வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு எதிரான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகனின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் ரவி இப்போது அதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

பள்ளியின் பிரார்த்தனை புத்தகத்தில் காயத்ரி மந்திரம், சாஞ்சி வாணி மட்டுமின்றி பல மத நம்பிக்கைகள் தொடர்பான பிரார்த்தனைகள் மற்றும் தேசப்பற்று தொடர்பான உறுதிமொழி உள்ளிட்டவையும் அடக்கம்.

பள்ளி முதல்வர் பேட்டி:

2003 ஆம் ஆண்டு பள்ளி நிறுவப்பட்டது முதல் பல சமய பிரார்த்தனைகள் காலை ‘அசம்பிளியின்’ ஒரு பகுதியாக இருந்ததாகவும், ஆனால் இஸ்லாமிய பிரார்த்தனைகளுக்கு சில பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் தேசிய கீதத்தை மட்டுமே பாட முடிவு செய்துள்ளது.

“இந்து, முஸ்லீம், சீக்கியர் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய நான்கு மதங்களின் பிரார்த்தனைகள் பள்ளியில் செய்யபட்டு வருகிறது, கடந்த 12-13 ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் உள்ளது, இதற்கு முன்பு வரை எந்த பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை” என்று ஃப்ளோரெட்ஸ் பள்ளி முதல்வர் ஷ்ரதா சர்மா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பிரார்த்தனை செய்யப்பட்டதால் கங்கை நீர் சடங்கு:

திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்டதும், பாஜக கார்ப்பரேட்டர் மகேந்திர நாத் சுக்லா கங்கையில் இருந்து புனித நீரை “கங்காஜல்” கொண்டு வந்து பள்ளி வளாகத்தை சுத்திகரிப்பு செய்தார். பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களுடன் சேர்ந்து, பள்ளி மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக சுக்லா உறுதியளித்தார்.

பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்:

அவர்கள் எங்களை சந்திக்க வர வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், இது போன்ற செயல் இனி நடக்காது என்று எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு எழுதி கொடுக்க வேண்டும்” அவ்வாறு செய்வார்களானால் நாங்கள் வழக்கை வாபஸ் பெற தயாராக உள்ளோம் என்று பாஜக வை சேர்ந்த திவாரி கூறுகிறார்.

திவாரியும் புகார்தாரர்களில் ஒருவர், அவரது மகனும் அதே பள்ளியில் படிக்கிறார்.

பள்ளியின் உரிமையாளர்கள் இந்துக்கள் என்பதால், உள்ளூர் இந்துத்துவா மேலாதிக்கக் குழுக்களை அமைதிப்படுத்துமாறு அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். “பள்ளி உரிமையாளர்களோ அல்லது மாணவர்களோ பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

ஒரு வழியாக புளோரெட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி வியாழன் அன்று மீண்டும் திறக்கப்பட்டது.