அகமதாபாத்: ஜூன் 16 முதல், கோலி, பர்வாத், தாக்கூர் மற்றும் காத்வி போன்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மோர்பியில் உள்ள ஒரு பள்ளியில் அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவை உட்கொள்ளவில்லை.
மாணவர்கள் சாப்பிடாததற்கு காரணம்:
இதற்குக் காரணம் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணி ஒரு தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அப்பெண்மணி சமைத்த உணவை சாப்பிடுவதை விரும்பவில்லை என்பதே. பள்ளி அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் மாதம் மோர்பி மாவட்டத்தில் உள்ள சோக்தா கிராமத்தில் உள்ள ஸ்ரீ சோக்தா தொடக்கப் பள்ளிக்கு மதிய உணவை தயாரிப்பதற்கான பணி தாரா மக்வானா என்ற தலித் சமூக பெண்ணுக்கு வழங்கப்பட்டது.
ஜூன் 16 அன்று, அவர் பள்ளிக்குச் சென்று சுமார் 153 மாணவர்களுக்கு உணவு சமைத்தார்,தாரா. பெற்றோரின் அறிவுறுத்தலால், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் சாப்பிட மறுத்ததாக சமீபத்தில் மோர்பி தாலுகா காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
தலித் சமூக பெண்ணின் கணவர் வேதனை:
“மாணவர்கள் தங்கள் உணவைப் பெற வரிசையில் உட்காராததால், நான் சில பெற்றோரிடம் விசாரித்தேன், அவர்கள் ஒரு தலித் பெண் சமைத்த உணவை தங்கள் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்க முடியாது என்று என்னிடம் சொன்னார்கள். ” என தாரா மக்வானாவின் கணவர், கோபி மக்வானா கூறினார்.
குழந்தைகள் சாப்பிடாததால் அதிக உணவு வீணாகிவிட்டதாக கோபி கூறினார். இதையடுத்து, பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், பலனில்லை.
“நானும் போலீசில் புகார் அளித்தேன், வழக்கு ஒரு டி.டி.எஸ்.பி.க்கு மாற்றப்பட்டது. இது பள்ளி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பிரச்சினை என்று போலீஸ் அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள், அவர்கள் தலையிட முடியாது,” என்று கூறியதாக கோபி கூறினார்.
சாதி வெறியால் தான் பாதிக்கப்பட்டதாகவும், காவல்துறை தலையிட வேண்டும் என்றும் தாரா கூறினார்.
தோல்வி அடைந்த பள்ளி முதல்வர் :
பள்ளி முதல்வர் பிந்தியா ரத்னோதர், பள்ளி கண்காணிப்புக் குழுவுடன் இது தொடர்பாக இரண்டு சந்திப்புகளை நடத்தியதாகவும்,அதில் பங்குகொண்ட பெற்றோர்கள் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறினார்.
“சாதிய மனப்பான்மை வேண்டாம் என்றும், அனைவரும் சமம் என்றும், யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை என்றும் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, அவர்களின் பெற்றோரை கற்பிக்க முடியவில்லை, அவர்கள் தங்கள் சாதிய சிந்தனையை கைவிட விரும்பவில்லை.” என்று ரத்னோதர் கூறினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (டிபிஇஓ) பாரத் விர்ஜா, இந்த விவகாரம் குறித்து தனக்குத் தெரியாது என்றும், வழக்கை விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.