ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆதரவாளர்கள் எப்போதும் நாடு தழுவிய மாட்டிறைச்சி தடை கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அசாமில் பாஜக வேட்பாளர் ஒருவர் மாட்டிறைச்சி இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளது, பாஜக வேட்பாளர்கள் ஓட்டு வேண்டுமெனில் எதையும் சொல்வார்கள் என்ற விமர்சனத்தை பெற்று தந்திருக்கிறது.
அசாம் கவ்ரிபூர் தொகுதியைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பனேந்திர குமார் முஷாரி, முஸ்லீம் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த தேர்தல் பரப்புரையில் ‘மாட்டிறைச்சி’ என்பது இந்தியாவின் ‘தேசிய டிஷ்’ என்று கூறியுள்ளதால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
“மாட்டிறைச்சியை தடை செய்யும் முயற்சியில் எவராலும் இறங்கமுடியுமா? இது இந்தியாவின் தேசிய உணவு ” என்று கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி பாஜகவில் இணைந்த பனேந்திரா, சிறுபான்மை வாக்காளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் நோக்கில் பேசியுள்ளார்.
மாட்டிறைச்சி ஒரு சர்வதேச உணவாகும் என்று கூறிய அவர், “அசாமில் அல்லது இந்தியாவில் எங்குமோ மாட்டிறைச்சி விற்பனையை யாரும் தடை செய்ய முடியாது என்பதை அசாமின் கிராமப்புறங்களில் படித்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
போடோ தலைவரான இவர் ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார், துப்ரி மாவட்டத்தில் கவ்ரிபூர் தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராக 1996 இல் அசாம் சட்டமன்றத்திற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்துத்துவா இயக்கம் புகார்:
துப்ரி மாவட்டத்தில் உள்ள மூத்த பாஜக கார்யகர்தாக்கள் காவ்ரிபூரில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பனேந்திரா பேசியது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர், மேலும் பாஜக வேட்பாளர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இதற்கிடையில், பூர்பஞ்சல் இந்து ஐக்கிய மஞ்சா உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை, டிஸ்பூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர், மேலும் வாக்கெடுப்புக்குட்பட்ட அசாமில் மாதிரி நடத்தை விதிகளை மீறியதற்காக பனேந்திராவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பாஜக வேட்பாளர் வெறுப்பை பரப்புவதாகவும், அசாமில் இரு மத சமூகங்களிடையே பகைமையைத் தூண்டுவதாகவும் புர்பஞ்சல் இந்து ஐக்கிய மஞ்சா புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர்.