Muslims Telangana

ஹைதிராபாத்: அக்கம்பக்கத்தினரால் கைடவிடப்பட்ட ஏழை இந்து; இறுதி சடங்கு மற்றும் உணவு ஏற்பாடு செய்த முஸ்லீம்கள்…

ஹைதிராபாத்: ஐந்து முஸ்லீம் நண்பர்கள் ஒன்றிணைந்து காசநோயால் இறந்த இந்து ஆட்டோ டிரைவர் ஒருவரின் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். இறந்தவரின் அக்கம்பக்கத்து வீட்டார் இது கோவிட் -19 மரணம் என்று அஞ்சினர்.

கைராதாபாத்தைச் சேர்ந்த வேணு முதிராஜ் (50) ஏப்ரல் 16 ஆம் தேதி OGH மருத்துவமனையில் இறந்தார், அவரது இறுதிச் சடங்கிற்காக மறுநாள் அவரது குடும்பத்தினர் உடலை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர் எனினும் அக்கம்பக்கத்து வீட்டார் எந்த உதவியும் செய்ய மறுத்துள்ளனர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதிராஜ் கொரோனாவால் உயிர் இழந்தார் என்றும் கூறி அவரது வீட்டாருக்கு மன உளைச்சலையும் தந்துள்ளனர்.

மனிதநேயம் மிக்க ஐவர்:

முதிராஜ் 2 பிள்ளைகளிடம் இறுதி சடங்கு செய்வதற்க்கு கூட பணம் இல்லாத நிலையில் நிர்கதியான நிலையில் இருந்த போது , விஷயத்தை அறிந்த (சில கிலோ மீட்டர் தள்ளி உள்ள) ராம் நகரில் வசிக்கும் சமூக ஆர்வலர் சாதிக் பின் சலாம் தனது 4 முஸ்லீம் நண்பர்களையும் அழைத்து விஷயத்தை கூறி உள்ளார். அனைவரும் உதவுவது என முடிவு செய்தனர்.

அதற்கேற்ப போலீசாரிடம் 10 பேர் பங்கேற்கும் விதத்தில் அனுமதியும் பெற்று கொண்டு முதிராஜின் இறுதி ஊர்வலத்திற்கு தங்கள் சொந்த பணத்தை செலவழித்து கைரதாபாத்தில் இருந்து பஞ்சாரா ஹில்ஸில் சாலை எண் 13 (இல் உள்ள உடலை தகனம் செய்யும் இடம்) வரை எடுத்து சென்றனர். மேலும் இது தொடர்பான மற்றுமுள்ள செலவினங்க்களையும் அவர்களே செய்துள்ளனர்.

முதிராஜின் மனைவி ஏற்கனவே உயிர் இழந்து விட்டார், அனாதையான நிலையில் குழந்தைகள் நிற்க அவர்களுக்கு உதவியாக இருப்பதை விடுத்து மனிதநேயத்தை குழி தோண்டி புதைத்த மக்களுக்கு மத்தியில் முஸ்லீம் இளைஞர்கள் செயல்பாடு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

உணவு ஏற்பாடும் செய்தனர்:

முதிராஜின் சகோதரரான வினோத், ” ஐந்து முஸ்லீம் நண்பர்களும், இந்து முறைப்படியான இறுதி சடங்கு நிறைவு பெரும் வரை எங்களுடன் இருந்தனர். எங்களுக்கும் எங்களின் சில உறவினர்களுக்கும் உணவு ஏற்பாட்டையும் அவர்களே மேற்கொண்டனர். இது சமூக ஒற்றுமைக்கான சிறந்த ஒரு எடுத்துக்காட்டு.” என கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாதிக், முகமது மஜித், அப்துல் முக்தாதிர், முகமது அகமது மற்றும் ஷேக் காசிம் ஆகிய அந்த ஐந்து முஸ்லிம்கள் “தப்லீக் ஜமாத்தினரால் தான் கொரோனா பரப்புகின்றனர் என்ற விஷம பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமூக நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் செயலை செய்து நாங்கள் அனைவரும் (இந்து முஸ்லிம்கள்) ஒன்றுபட்டவர்கள், எங்களை பிரிக்க முடியாது எனும் செய்தியை கூறி உள்ளோம்” என கூறியுள்ளனர்.

அது மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனா குறித்த அச்சத்தை நீக்கி விழிப்புணர்வையும் செய்து விட்டு சென்றுள்ளனர் ஐவரும்.