டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பெரும் உயிரிழப்பும், பொருட்சேதமும் ஒருபுறமிருக்க பெண்களிடமும் பாசிச பயங்கரவாதிகள் அத்துமீறி உள்ளனர். இது குறித்து நியூஸ் 18 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
“எங்கள் உடலை துப்பட்டாவால் சுற்றிக்கொண்டு, எங்கள் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து எங்களை நாங்கள் காத்து கொண்டோம்” என்கிறார் கிழக்கு டெல்லியின் அல்- ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயதான பெண் ஒருவர்.
“கடந்த வாரம் புதன்கிழமை அன்று நான் எனது இரண்டு மகள்களுடன் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென வீட்டிற்குள் வந்த கும்பல் ஒன்று எங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டனர். ஆடைகளை கிழித்தனர்” என கண்கள் குளமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி கூறுகிறார். இவர் கராவா எல் நகரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
குண்டர்கள் திரும்பி சென்றனர்:
நாங்கள் அங்கிருந்து தப்பித்து மாடியில் இருந்து குதித்தோம். எனினும் அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து ஓடி வந்தனர். பிறகு மளிகை கடைக்காரர் அய்யூப் வீட்டிற்குள் நுழைந்தோம். நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்த பிறகுதான் எங்களைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். காரணம் எங்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு அயூபை அறிந்து வைத்திருந்தனர் என்கிறார் அந்த பெண்.
அயூப் எங்களுக்கு உணவு மற்றும் பிற தேவையான பொருட்களைக் வழங்கினார், பின்னர் எங்களை அல்-ஹிந்த் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குற்றவாளிகள் யார் என்று என்னால் அடையாளம் காட்ட முடியும், அவர்கள் எங்கள் வீதியில் வசிப்பவர்கள் தான் என கூறுகிறார் அந்த பெண்.
நடந்த சம்பவத்தால் பெண்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளதாக அயூப் தெரிவித்தார்.
பாசிச பயங்கரவாதிகள் நடத்திய வெறி ஆட்டத்தில் பாதிக்கப்பட்ட பல பேரில் இந்த பெண்ணும் ஒருவர். இவரை போன்று பலர் அல்-ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள ஒவ்வொருவரும் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
சல்மானுக்கும் அகிலுக்கும் ஏற்பட்ட நிலை:
அதேபோல கரவால் பகுதியைச் சேர்ந்த சல்மான் கான் என்பவரும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நான் எனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் என்னை பிடித்து எனது முதுகில் அமிலத்தை ஊற்றினர். என்ன செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை எனது முதுகில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டது என்கிறார் 20 வயதான சல்மான்.
அதேபோல் 30 வயதான அகில் சைப் என்பவரும் உடல் ஊனமுற்ற தனது நண்பர் பிலாலுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, வழிமறித்த கும்பல் ஊனமுற்ற தனது நண்பர் தலையில் தொப்பி அணிந்து இருந்ததை வைத்து அவர் முஸ்லிம் என்று அறிந்து கொண்டு அவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது.
அகிலின் இடது கையின் விரல்கள் உடைக்கப்பட்டு விட்டது எனது நண்பர் பிலாலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18