ஞாயிற்றுக்கிழமை மாலை, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத ஆராய்ச்சி மாணவர் சூர்யா பிரகாஷ் தனது வாசிப்பில் மூழ்கி இருந்த சமயம்.. பார்வை குறைபாடுள்ள சூர்யா பிரகாஷ், JNU சபர்மதி ஹாஸ்டலின் அறை எண் 051 ல் இருந்து வருகிறார்.
இரவு 7 மணியளவில், முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் இரும்பு கம்பிகள், லத்திகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொண்டு விடுதி வளாகத்திற்குள் நுழைந்துள்ளார். விடுதி கட்டணம் அதிகரிக்க பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்தது அந்த கும்பல். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் செமஸ்டருக்கான பதிவுகளை புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்திருந்தனர்.
“நான் எனது ரூமில் படித்து கொண்டிருந்த போது கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே வந்தனர். எனக்கு கண் தெரியாது என கூறியும் அவர்கள் என்னை நம்பவில்லை. நான் பொய் சொல்வதாக கூறினர். அவர்கள் கைககளில் வைத்திருந்த கம்புகளால் என் பின்புறத்தில் கடுமையாக தாக்கினார்கள்.
என்னை அடிக்காதீர்கள் என எத்தனை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. நான் சமஸ்கிருத மாணவர், இந்து மதத்தின் முக்கிய படைப்புகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ள மாணவர் என்பதும் கூட என்னை தாக்கியவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை.. என்னை தாக்கிய பிறகே அவர்கள் சென்றனர். இதை பற்றி நான் வெளியே கூறியதால் காலையில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.” என சூர்யா கூறியுள்ளார்.
பி.ஆர்.அம்பேத்கரின் புகைப்படம் விடுதி வாசலில் இருந்ததால் பிரகாஷ் குறிவைக்கப் பட்டிருக்கலாம் என்று சபர்மதி ஹாஸ்டலில் இருக்கும் மற்றொரு மாணவர் கவ்ரவ் கூறினார். “குண்டர்கள் அத்தகைய சுவரொட்டிகளைக் கொண்ட அறைகளை குறிவைத்தனர்,” என்று மேலும் அவர் கூறினார்.
தாக்கப்பட்ட பிரகாஷ் இதுவரை 2 முறை மருத்துவனைக்கு சென்று வந்துள்ளார். மருத்துவர்கள் ஊசி போட்டுள்ளனர். கைகள் மற்றும் முதுகில் இன்னும் வலி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.