உபி மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் வெள்ளியன்று போலீசாரால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் இருபது வயதே நிறைந்த இருவரை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 131 பேரை கைது செய்துள்ளது யோகி தலைமையிலான உபி போலீஸ்.
21 வயதான அனஸ் மற்றும் 20 வயதேயான முகமது சுலைமான் இருவரையும் தான் வீடுபுகுந்து கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இதுபற்றி கூறிய பிஜ்னோர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் தியாகி கூறியபொழுது 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதில் 70 பேர் நேத்தாரை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட சுலைமானின் தாயார் அக்பரி காத்தூன் கூறுகையில் , “எனது மகன் UPSC தேர்வுகளுக்காக (ஐஏஎஸ் ஆக) தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த ஒரு மாணவனாவான், இரவு பகலாக தனது லட்சியத்தை அடைய பாடுபட்ட , போராட்டங்களில் கூட பங்கு கொள்ளாத எனது மகனை போலீசார் அநியாயமாக சுட்டு கொன்று விட்டனர்.” என்றார். போலீசாரின் காட்டுமிராண்டி தனத்தை அனுபவித்த சுலைமானின் குடும்பத்தார், அவர்கள் போலீசாரே இல்லை அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். சுலைமானின் தங்கை ஷீபா கூறியபோது அவர்கள் போலீஸ் இல்லை பாவிகள் என்றார் அழுகையுடன்.
இரண்டாவதாக, அனஸ் என்பவரது நிலையோ மிகவும் வேதனைக்குறியது, ஏழு மாத குழந்தையின் தந்தையான அவர், போலீஸ் செய்த கலவரத்தின் போது குழந்தைக்கு பால் வாங்கத்தான் வெளியே சென்றார், போராட்டத்திற்காக அல்ல என்கிறார் அவரது தந்தை அர்ஷத் ஹுசைன்.
எனது மகன் காயம்பட்டு் ரத்தம் சிந்திய இடத்தில் இன்னும் கூட அவனது ரத்தக்கறை காயவில்லை என கண்கள் பணிக்கின்றார் அவர். இறந்துபோன அனஸ் மற்றும் சுலைமான் ஆகிய இருவரையும் சொந்த ஊரில் கூட அடக்கம் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களை உள்ளூரிலே அடக்கம் செய்ய அனுமதித்தால் கலவரம் மேலும் வலுப்பெறும் எனவே 20 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் நேத்தார் பகுதியில் அடக்கம் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாரும் வழக்கு பதிய முன்வரவில்லை என்பதும் வேதனையான விஷயம்.வெள்ளியன்று அப்பகுதியில் போலீசார் நடத்திய கலவரத்தில் குறிப்பாக முஸ்லிம் வீடுகளில் புகுந்து ஆண்களை இழுத்துச் சென்ற தோடல்லாமல் வீட்டுள்ள டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். 36 வயது கமர் அகமதுவின் தாய் ஜரீனா காத்தூன் கூறுகையில் சமையலறையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்களை சேதப்படுத்திய போலீசார், தங்களை எரித்துவிடுவதாக எச்சரித்துவிட்டு சென்றார் என்கிறார்.
அதுபோல நிஷாத் பர்வீன் என்பவர் கூறுகையில் எனது அண்ணன் ஜாவித் அன்சாரியை வீடு புகுந்து அடித்து இழுத்துச்சென்ற போலீசாரில் அனைவரும் ஆண்களாக இருந்தனர், பெண்கள் இருக்கும் வீட்டில் புகுந்து எங்களை லத்தியை கொண்டு அடித்தவர்களில் ஒருவர் கூட பெண் போலீஸ் இல்லை, இதுவரை எங்களது சகோதரர் எங்கே உள்ளார் என தெரியவில்லை என கூறியுள்ளார். நேத்தாரில் இருக்கும் நயா பஜார் எனும் பகுதியில் வெள்ளியன்று தொழுகைக்கு பின்னர் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கான அடையாளமாக அங்குள்ள வீடுகள் மற்றும் தெருமுனை கம்பங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளதை காணலாம்.
இந்த பகுதி முழுக்க பயம் நிறைந்துள்ளது, எங்களது மக்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் பயத்துடனே வாழமுடியும் என்கிறார் உள்ளூர்வாசி ஒருவர். இந்த கலவரம் நடத்தேறிய பிறகு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நேரில் வந்து அம்மக்களுக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளார்.