தப்ரேஸ் அன்சாரியை கூட்டுக்கொலை செய்தவர்களுக்கு ராஞ்சி நீதிமன்றம் பெயில் கொடுத்துள்ளது.
தப்ரேஸ் அன்சாரி, பாஸிஸ மத வெறியர்களால் கும்பல்கொலை செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் அவரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்ட 13 கொலையாளிகளில் 12 பேருக்கு பெயில் கொடுத்து விடுதலை செய்துள்ளது ராஞ்சி நீதிமன்றம்.
இவர்களில் ஐந்து பேருக்கு நேற்று, டிச:10ம் தேதியும், மற்றொருவருக்கு டிச:9ம் தேதியும் பெயில் வழங்கப்பட்டது, மேலும் ஐவருக்கான பெயில் நிலுவையிலுள்ளது அவர்களுக்கும் அடுத்த வாரத்தில் பெயில் கிடைத்துவிடும் என்று கொலையான தப்ரேஸ் அன்சாரி தரப்பு வழக்குறைஞர் ஏ.அல்லாம் தெரிவித்துள்ளார். பெயில் வழங்கப்பட்டவர்களது பெயர்களை கூட வெளியிடாமல் அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என அவர் மேலும் கூறினார்.
போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் கைதான கொலையாளிகள் 13 பேரின் மீதும் கொலை வழக்கு கூட பதிவு செய்யாமல் இருந்த காவல்துறையினர் மீது பொதுமக்களின் கோபமும் அதிருப்தியும் ஏற்பட்ட காரணத்தால் அவர்களது பெயர்களை கூட குறிப்பிடாமல் அவர்களது பெயரில் போலியான கொலை வழக்கு ஒன்றை ஒப்புக்காக பதிவு செய்துள்ளனர் போலீசார். இதன் பின்னணியில் அவர்களுடைய அரசியல் செல்வாக்கினை அறியமுடிகிறது.
தப்ரேஸ் அன்சாரியின் மரணத்திற்கு பிறகு அவரது குடும்பத்தாரும் மனைவி ஸாஹிஸ்த்தாவும் அவரது சகோதரர் மஸ்ரூர் அன்ஸாரியின் பராமரிப்பில் தலைமறைவாக வாழ்கின்றனர். கொலையாளிகள் ஒவ்வொருவராக பெயிலில் வெளிவருவதை அறிந்து அவர்கள் பயத்தில் உறைந்து போயுள்ளனர் என்கிறார் வழக்குறைஞர் அல்லாம்.
கடந்த ஜீன் 17, அன்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞன் தப்ரேஸ் அன்சாரியை சூழ்ந்துகொண்ட இந்துத்துவ கும்பல் கொலை கூட்டத்தார், அவரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து, ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என கூறச்சொல்லி அடித்துள்ளனர். அதில் படுகாயமடைந்த தப்ரேஸ் , ஐந்து நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் பரிதாபமாக இறந்து போனார். அவரை மீட்டு சிகிச்சை அளிக்க கூட முன்வராத காவல்துறையினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கில் தாமதம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
தப்ரேஸ் அன்சாரியை கும்பல் கொலைக்கார கூட்டம் கட்டி வைத்து அடித்தது காயப்படுத்தியது அத்தனையும் அங்கே இருந்தவர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரவியது.. அவற்றை காணாதவர் என யாருமில்லை இதை விடவா ஒரு ஆதாரத்தை போலீசாரும் நீதீமன்றமும் எதிர்பார்க்கிறது என தப்ரேஸின் சகோதரர் கேட்கிறார்!
ஆக்கம் : நஸ்ரத்