Lynchings

கும்பல் படுகொலைகள் : புள்ளிவிவரத்தை வெளியிடாத தேசிய குற்ற ஆவணக் காப்பகம் !

அண்மையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2017-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது. காவிக் கும்பல் மற்றும் காப் பஞ்சாயத்தின் சட்டவிரோத கொலைகள், கும்பல் வன்முறை குறித்து தகவல்களைத் திரட்டியபோதும் அதுகுறித்து அறிக்கையில் கூறப்படவில்லை.

“கும்பல் கொலைகள் உள்ளிட்டவை குறித்த தரவுகள் வெளியிடப்படாதது வியப்பளிக்கிறது. இந்தத் தரவு தயாராக, முழுமையாகத் தொகுக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டது. இது வெளியிடப்படாததுக்கான காரணம் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஒரு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நாடு முழுவதும் கும்பல் வன்முறையும் கொலைகளும் நிகழ்ந்த நிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் இயக்குநர் இஷ் குமார், புதிய துணை பிரிவின் கீழ் வகைப்படுத்த முடிவு செய்தார். கும்பல் வன்முறை கால்நடை திருட்டு அல்லது கடத்தல், குழந்தை கடத்தல் போன்ற பல வதந்திகளின் காரணமாக நடந்தன. பெரும்பாலான சம்பவங்களில் ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் செயல்பட்ட காவி கும்பல், முசுலீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றியது.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். துவக்க நாள் விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், ‘கும்பல் வன்முறை’ இந்தியாவை களங்கப்படுத்த மேற்கத்தியர்கள் உருவாக்கிய வார்த்தை என பேசினார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாக மோகன் பகவத்தின் பேச்சை கண்டித்திருந்தனர்.

கும்பல் கொலைகளில் ஈடுபட்ட காவி கும்பலை ஆளும் பாஜக-வைச் சேர்ந்த தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரித்தனர். முகமது அக்லக், பெஹ்லு கான், அன்சாரி வரை அவர்களைக் கொன்ற காவி கும்பல் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிக்க வைக்கப்பட்டனர். ஆளும் அரசாங்கங்களுடன் போலீசு, நீதிமன்றம் ஆகியவை கூட்டாளிகளாக செயல்பட்டு, கும்பல் கொலையாளிகளை ஊக்குவித்தது.

மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், ஜூலை 2018-ம் ஆண்டு மாநிலங்களவையில் மத்திய அரசாங்கத்திடம் கும்பல் வன்முறைகள் குறித்து எந்த தரவும் இல்லை; ஏனெனில் தே.கு.ஆ. காப்பகம் இந்தத் தரவுகளைத் திரட்டவில்லை என கூறினார்.

அரசாங்க முகமைகளால் திரட்டப்படும் தரவுகளை வெளியிட தாமதிப்பதில், அதில் குளறுபடிகள் செய்வதில் மோடி அரசாங்கம் இழிபுகழ் பெற்றது. சென்ற ஆண்டு வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிடாமல் இழுத்தடித்து, கண்டனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை துணை தலைப்புகளின் கீழ் எண்கள் இல்லாமல் வெளியாகியுள்ளது. தனக்குப் பிரச்சினை உண்டாகக்கூடும் என கருதும் விவரங்களை வெளியிட மோடி அரசாங்கம் பயம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சரியான தரவுகளை வெளியிடாமல் இந்திய அரசாங்கம் எப்படி தகிடுதத்தம் செய்கிறது என்பதை சர்வதேச நாணய நிதியமும்கூட சுட்டிக்காட்டியுள்ளது. சிறப்பு தரவு பரவல் தரநிலை குறித்த 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கண்காணிப்பு அறிக்கை, சர்வதேச நாணயம் நிதியம் நிர்ணயித்த கால வரம்புகளை இந்தியா பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியிருந்தது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2017 அறிக்கை என்ன சொல்கிறது?

2016-ம் ஆண்டைக் காட்டிலும் குற்றங்கள் 3.6% அதிகரித்துள்ளன என்கிறது தே.கு. ஆ. கா. அறிக்கை. கொலைகள் 5.9% குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடத்தல் வழக்குகள் 9% அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டு 88,008 வழக்குகள் பதிவான நிலையில், 2017-ம் ஆண்டு 95,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2015-ம் ஆண்டு முதல் மூன்றாவது ஆண்டாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்த ஆண்டும் அதிகரித்துள்ளன. 3, 59, 849 வழக்குகள் 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொலை, வன்புணர்வு, வரதட்சணை மரணம், தற்கொலைக்கு தூண்டப்படுதல், அமில வீச்சு, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் போன்றவை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு தகவல் திரட்டப்பட்டன.

டெல்அருணாச்சல பிரதேசம், கோவா, இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்கள் பெண்களுக்கான எதிரான குற்றங்களில் மூன்று இலக்க எண்ணிக்கையில் குற்றங்கள் நிகழ்ந்ததாக அறிக்கை கூறுகிறது. அதாவது இந்திய அளவிலான குற்றங்களில் இந்த மாநிலங்கள் வெறும் 1 சதவீதம் மட்டுமே குற்றங்கள் நடந்துள்ளதாக கூறுகிறது தே.கு. ஆ. கா. தரவு.

தே. கு. ஆ. காப்பகத்தின் 2017-ன் அறிக்கையின்படி, அதிக குற்றம் நடத்த மாநிலமாக உத்திர பிரதேசம் (56,011), இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிர மாநில (31,979) மும் மேற்கு வங்கம் (30,992) மூன்றாவது இடத்திலும் மத்திய பிரதேசம் (29,778) நான்காம் இடத்திலும் இராஜஸ்தான் (25,993), அசாம் (23,082) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.லியில் 2015-ம் ஆண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதையும் தே. கு. ஆ. காப்பக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாநிலங்களில் மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற மாநிலங்களை 2017-ல் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது பாஜக என்பது குறிப்பிடத்தகுந்தது. கும்பல் கொலைகள், வன்முறைகளையும் சேர்த்தால் பாஜக ஆட்சியில் இந்த மாநிலங்களில் எத்தகைய ‘பிரகாசமான’ நிலையில் உள்ளன என்பதைக் காட்டியிருக்கும். இந்த நிலையில்தான் ‘வளர்ச்சி, முன்னேற்றம்’ என ஓயாமல் காவிகள் கத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அனிதா
நன்றி : தி வயர், வினவு