பண்டிகை விற்பனை காலங்களிலும் கூட வாகன விற்பனை மந்தமான நிலையில் உள்ளதால் வாகன உற்பத்தியாளர்களிடேயே அதிக நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசுகி அதன் உற்பத்தியை 17.48 சதவீதம் குறைத்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகனங்களின் உற்பத்தியை 63 சதவீதம் குறைத்து வெறும் 6,976 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 18,855 யூனிட்களாக இருந்ததுள்ளது.
மாருதி சுசுகி அதன் உற்பத்தியை தொடர்ந்து எட்டாவது முறையாக குறைத்து அறிவித்துள்ளது.”மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 1,32,199 யூனிட்டுகளை உற்பத்தி செய்துள்ளது, ஆனால் இதே காலகட்டத்தில் முந்தைய ஆண்டு 1,60,219 யூனிட்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.” என்று நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களும் செப்டம்பர் மாதத்தில் இரட்டை இலக்க அளவில் சரிவைக் கண்டுள்ளனர். மாருதி சுசுகி 27 சதவீத வீழ்ச்சியையும், பரம எதிரியான ஹூண்டாய் 14.8 சதவீத வீழ்ச்சியையும் பதிவு செய்தது. டாடா மோட்டார்ஸ் 56 சதவீதத்திலும், நிசான் 55.6 சதவீதத்திலும், ஹோண்டா 37 சதவீதத்திலும், ஃபோர்டு 32.5 சதவீதத்திலும், மஹிந்திரா 28 சதவீதத்திலும் சரிவைக் கண்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.