குவஹாத்தி: அசாமின் டாரங் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணும் அவரது இரண்டு சகோதரிகளும் புறக்காவல் நிலையத்திற்குள் ஆடைகளை களையப்பட்டு , சித்திரவதை செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் விளைவாக அந்த பெண் தனது வயிற்றில் இருந்த குழந்தையை பறிகொடுத்த நிலையில் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநில மகளிர் ஆணையம் தானாக முன் வந்து வழக்கை பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து டாரங் காவல்துறை கண்காணிப்பாளர் அமிரித் பூயானாவை விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில காவல்துறைத் துணைத்தலைவர் (DIG) குலதர் சைக்கியா உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த போதிலும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யாததால் பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களை அணுகி உள்ளனர். இதற்கு பின்னர் செவ்வாய்க்கிழமை தான் செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
என்ன நடந்தது?
மினுவாரா பேகம், சானுவாரா மற்றும் ருமேலா ஆகிய 3 சகோதரிகளும் கடத்தல் வழக்க்கு ஒன்றின் பெயரில் புர்ஹா புறக்காவல் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மினுவாரா , கடந்த செப்டம்பர் 10 ம் தேதி தர்ராங் எஸ்.பி.க்கு அளித்த புகாரில், புர்ஹா போலீஸ் புறக்காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மகேந்திர சர்மா தலைமையில் வந்த காவல் துறையினர் வீட்டிலிருந்த தன்னையும் தனது இரண்டு சகோதரிகளையும் அழைத்து சென்று அன்றைய இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.தாக்கியவர்களில் ஒரு பெண் கான்ஸ்டபிள் காவலரும் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் மினுவாரா.
“கம்புகளால் நாங்கள் கொடூரமாக தாக்கப்பட்டோம். என் கர்ப்பிணி சகோதரி தனது வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து கொண்டிருப்பதால் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கதறினாள்.எனினும் தலைமை காவலர் மகேந்திர சர்மா “நீ நடிக்காதே” என்று கூறி (ஈவு இரக்கமின்றி தொடர்ந்து தாக்கி)யுள்ளார்.. தாக்குதல் காரணமாக அவர் தனது குழந்தையை இழந்துள்ளார் ”என்று சகோதரி மினுவாரா கூறினார்.
மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் தேவையான தக்க நடவடிக்கை(!) எடுக்கப்படும் என்று தாரங் காவல் நிலைய எஸ்பி தெரிவித்துள்ளார்.
“ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் இளைஞரால் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தான் அவர்கள் (மூன்று சகோதரிகள்) அழைத்துச் செல்லப்பட்டனர். மூத்த சகோதரி சிறுமியைக் கடத்திச் சென்று அவர்களது வீட்டில் வைத்திருந்தார் ” என்று தாரங் எஸ்பி இந்தியன் எக்ச்பிரஸிடம் தெரிவித்துள்ளார். எனினும் நீதிமன்றம் தான் காவலர் தெரிவித்த இந்த தகவலின் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் வெறுமென ‘ஒருவரின் கடத்தல் வழக்கு தொடர்பாக சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்’ என்று குறிப்பிடாமல் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு ‘இந்து கடத்தப்பட்டார்-முஸ்லிம் கடத்தினார்’ என்று வார்த்தை பிரயோகம். மேலும் இது தொடர்பாக நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்யவும் இல்லை, அதற்கு முன்னரே முஸ்லிம் கடத்தினார் என்று ஒரு மதத்தின் பெயரால் விசாரணை முழுமை பெரும் முன்னரே இவ்வாறுகூறியுள்ளது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும்.
அசாம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் சிக்கிமிகி தாலுக்தார் கூறுகையில் : “இந்த தாக்குதல் சம்பவமானது நாகரிக சமுதாயத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கொடூரமான குற்ற செயலாகும். இது தொடர்பாக தாரங் எஸ்.பி.க்கு நோட்டீசை அனுப்ப உள்ளோம்” என்று கூறினார் .