International News Pakistan Sikhs

500 ஆண்டுகள் பழமைவாய்ந்த குருத்வாரை இந்திய சீக்கியர்களுக்காக திறந்தது பாகிஸ்தான் அரசு!

(Photo – Xubayr Mayo)

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் 72 ஆண்டுகளுக்கு பின்னர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா சோவா சாஹிப்பின் கதவுகளை பாகிஸ்தான் கடந்த வெள்ளியன்று சீக்கிய பக்தர்களுக்காக திறந்துள்ளது.குருநானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட சீக்கிய பக்தர்களுக்கு குருத்வாரா திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு குடியேறிய பின்னர் 1947 ஆம் ஆண்டு குருத்வாரா மூடப்பட்டதிலிருந்து புறக்கணிக்க பட்ட நிலையில் இருந்தது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான ரோஹ்தாஸ் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள குருத்வாரா சோவா சாஹிப், பல உயர் அதிகாரிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் முன்னிலையில் ஒரு வண்ணமயமான விழாவை கொண்டு மீண்டும் திறக்கப்படுள்ளது.

சீக்கிய சமூக உறுப்பினர்கள் நிகழ்த்திய ‘அர்தாஸ்’ (பிரார்த்தனை) மற்றும் ‘கீர்த்தன்கள்’ (பக்தி பாடல்கள்) களுடன் விழா தொடங்கியது.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் புனித இடங்களை கவனிக்கும் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியத்தின் (ஈடிபிபி) தலைவர் டாக்டர் அமர் அஹமத் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்திக் கமிட்டி (பி.எஸ்.ஜி.பி.சி) தலைவர் சர்தார் சத்வந்த் சிங் கலந்து கொண்டார்.

“குருத்வாரா சோவா சாஹிப் வழிபாடு மற்றும் வருகைக்காக திறக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு சீக்கியர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது … அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தாலும் அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் வந்தாலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பார்வையிட அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்” என்று எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரிய செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி பி.டி.ஐ. யிடம் தெரிவித்தார்.

மேலும் குருத்வாராவின் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன, என்றார்.

மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் நியமிக்கப்பட்ட குருத்வாராவின் பணிகள் 1834 இல் நிறைவடைந்தது. அருகிலுள்ள தில்லா ஜோகியன் கோயில்களிலிருந்து திரும்பி வரும் வேலையில் குருநானக் அந்த இடத்தில் தங்கியிருந்தார் என்று நம்பப்படுகிறது.

அண்மையில் பாகிஸ்தான் கிழக்கு நகரமான சியால்கோட்டில் பல நூற்றாண்டுகள் பழமையான ஷவாலா தேஜா சிங் கோயிலையும் வழிபாட்டுக்காக திறந்தது என்பது குறிப்பிட தக்கது.