Hindutva

கோவை: விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கலகம் விளைவிக்கும் நோக்கில் கோஷமிட்ட ‘VHP’- இந்துத்துவ அமைப்பை சேர்ந்த மூவர் கைது!

கடந்த செப்டம்பர் 6 ம் தேதி முத்தன்னங்குளம் அருகே விநாயகர் சிலை கொண்டு சென்ற ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் விதத்தில் இந்துத்துவ அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் காஷ்மீர் பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் தேவை இல்லாமல் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர்.

இதனை வீடியோ எடுத்த நபர் விஷ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர். வீடியோவை எடுத்த அவரே சமூக வலைத்தளங்களிலும் பரவ விட்டுள்ளார். இதனை எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள். மாறாக மக்கள் இதனை ரசித்து , அதிகம் பரப்பி தன்னை ‘பெரும் சமூக சேவை செய்தவர் ‘ என்று புகழ்வார்கள் என்ற கற்பனை கொண்டிருக்க போய் தான் வீடியோவை இவர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்க கூடம். ஆனால் நமது தமிழக மக்கள் மத அடிப்படையில் துவேஷம் பரவ செய்பவர்களை நஞ்சென வெறுப்பார்கள். தமிழகம் வட இந்தியா இல்லை என்பதை ஏனோ இவர் மறந்து விட்டார். இதனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் கணபதியைச் சேர்ந்த சி.அரவிந்த்சாமி, 22, எம் லோகநாதன், 20, மற்றும் கே சிவசாமி (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 (பி) மற்றும் 505 ( (கலகம் செய்வதற்கு தூண்டுதல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . பின்னர் அவர்கள் நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடந்த சம்பவம்:

விநாயகர் சிலை கொண்டு சென்ற ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை இழிவாக பேசும் வீடியோ வைரல் ஆனது. ஒரு சில சமூக ஆர்வலர்களும் வீடியோக்களைப் பகிர்ந்து, உளவுத்துறை அதிகாரிகளும், என்.ஐ.ஏவும் இவர்களுக்கு எதிராக செயல்படுவார்களா ? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட ஒருவர் வீடியோவைப் பேஸ்புக்கில் பதிவேற்றி தனது நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ஆர்.எஸ்.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனா ஜோதி புதன்கிழமை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த மூவருக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்,

முன்னதாக போலீசார் “எந்தவொரு சமூகத்திற்கும் எதிராகவும் கோஷங்களை எழுப்ப வேண்டாம், பிற சமூக மக்களுடன் பகைமையை வளர்க்க வேண்டாம் ” என்று மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இந்துத்துவ அமைப்புகளுக்கு கண்டிப்பாக அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

துரிதமாகவும் எந்த வித பாகுபாடு இன்றி சட்டம் அனைவர்க்கும் சமம் என்பதை பறைசாற்றும் விதத்தில் செயல்பட்ட கோவை மாவட்ட காவல் துறையினருக்கு நியூஸ்காப் நன்றி தெரிவித்து கொள்கிறது.