நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோரக்பூர் தலைமை பூசாரி அஜய் பிஷ்த் சிங் ஆளும் உபி மாநிலத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாத கோவில் அர்ச்சகர்கள் நடுரோட்டில் கூட்டமாக பூஜை செய்தனர்.
கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. மத்திய அரசு மத ரீதியான எந்த ஒரு ஒன்று கூடலுக்கும் தடை விதித்துள்ள நிலையில் இவ்வாறு சட்ட விரோதமாக பல அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.
காசி விஸ்வநாத கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் கோவிலின் நிர்வாகிகள் குறித்து காசி விஸ்வநாத் கோயிலின் தலைமைக் காப்பாளரும், மகாந்த் குடும்பத்தின் மூத்த உறுப்பினருமான சஷி பூஷண் திரிபாதி போன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கோவில் நிர்வாகிகள் மஹந்த் குடும்பத்தினரை உள்ளே நுழையவோ பூஜை செய்யவோ அனுமதிக்கவில்லை.
நடு ரோட்டில் பூஜை:
கோயிலுக்குள் நுழைவதைத் தடுத்த கோபத்தில், நாடு ரோட்டிலேயே ‘சப்தா ரிஷி’ ஆர்த்தியை செய்தார். மஹந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்த்தியின் போது பாபா காசி விஸ்வநாத்தின் பூமிக்குரிய சிவலிங்கத்தை உருவாக்கி, ‘ஜலபிஷேக்’ மற்றும் ‘தஹுபபிஷேக்’ பூஜைகளை செய்தனர்.
போதிய சமூக இடைவெளி பேணப்படாமல், அனைவராலும் முக கவசமும் அணியப்படாமல் ஒன்று கூடியதால் கொரோனா நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக ஒன்றுகூடிய அர்ச்சகர்கள்:
இந்த பூஜை செய்தவர்களில் சிலர் முக கவசத்தை அணிந்து இருந்தனர். பலர் அணியவில்லை. மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சட்ட விரோதமாக மத சடங்கை நடுரோட்டில் வைத்து செய்துள்ளனர். எனினும் இது குறித்து பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகவில்லை. அதற்க்கு காரணம் இவர்கள் யாரும் தப்லீக் ஜமாத்தினர் இல்லை என்பது தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஊடக தர்மம்:
இந்த சம்பவம் குறித்து மோடி ஆதரவு ஊடகமாக அறியப்படும் ஆஜ் தக் செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பெயர் போன இந்த ஊடகம் இது குறித்து வெளியிட்ட செய்தியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மஹந்த் குடும்பத்தினர் கோவிலுக்குள் நடத்திவந்த பூஜை சாலையில் நடக்க வேண்டியதாயிற்றே என்ற வருத்தத்தை மட்டுமே பதிவு செய்யும் தோரணையில் உள்ளது. கொரோனா என்ற சொல்லே அவர்கள் வெளியிட்டுள்ள ஆக்கத்தில் காணப்படவில்லை.
கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக சட்ட விரோதமாக உபி முதல்வரும் அயோத்தியில் பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.