உத்தரபிரதேசத்தில் ரயில் பயணத்தின்போது கேரள கன்னியாஸ்திரிகள் குழுவை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதற்கு சிரோ மலபார்-சர்ச் கண்டன அறிக்கை வெளியிட்ட ஒரு நாளில், இந்த சம்பவத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் இந்த தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சரை, பினராயி கேட்டுக் கொண்டார்.
நடந்த சம்பவம்:
மார்ச் 19 அன்று, கேரளாவை தளமாகக் கொண்ட சிரோ-மலபார் தேவாலயத்தின் கீழ் உள்ள சீக்ரட் ஹார்ட் கான்வென்ட்டைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு போஸ்டுலண்டு சகோதரிகள் புதுடில்லியில் இருந்து ஒடிசாவில் உள்ள ரூர்கேலாவுக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் பஜ்ரங்தள் ஆட்களால் தாக்கப்பட்டனர். கன்னியாஸ்திரிகள் போஸ்டுலண்டுகளை கிறிஸ்தவ மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்வதாக பஜ்ரங் தள் அமைப்பினர் குற்றம் சாட்டினர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை அடைந்தபோது பஜ்ரங் தள் அமைப்பினர் ரயிலுக்குள் அடாவடியில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் வெளிவந்த சம்பவங்களின் வீடியோக்கள் காட்டின.
போலீசார் விசாரணை:
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் மற்றும் போஸ்டுலண்டுகள் உ.பி. போலீசார் கடுங்காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறி தங்கள் ஆதார் அட்டைகளைக் காட்டிய பின்னரும், பஜ்ரங் தளம் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களை நான்கு மணி நேரம் போலீசார் விசாரித்தனர். உயர் அதிகாரிகள் தலையிட்டு அடையாளங்களை சரிபார்த்த பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று சர்ச் தெரிவித்துள்ளது.
பினராயி கண்டனம்:
எந்த மகளிர் போலீஸ் அதிகாரிகளும் இல்லாமல் கன்னியாஸ்திரிகளை காவலில் எடுத்ததற்காக பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் மத நல்லிணக்க பிம்பத்தை கெடுக்கின்றன என்றும் பினராயி விஜயன் கூறினார்.
“அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனிநபர் உரிமைகளின் சுதந்திரத்தை சீர்குலைத்து பாதிப்புக்கு உள்ளாகும் அனைத்து குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க” சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு உள்துறை அமைச்சரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.