CAA Hindutva Muslims Uttar Pradesh

உபி : தண்ணீர் குடி, ஆனா சிறுநீர் போகக்கூடாது, தூங்கக்கூடாது, கொடூர தயடிகள் என சிறுவர்கள் மீது கொடூரத்தை அரங்கேற்றும் போலீசார்!!

CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள் எனக்கூறி சிறுவர்கள் மீது வன்முறையை ஏவிய உபி போலீஸ் – உண்மைநிலையறியும் குழு சமர்பித்த ஒரு கள ரிப்போர்ட்

உபி மாநிலம் லக்னோ, பிஜ்னோர், முஸாபர்நகர் மற்றும் பிரோஸாபாத் நகரில் கடந்த டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி ஆகிய மாதங்களில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு மிகத்தீவிரமான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன, அவற்றில் அமைதிப்பேரணிகளே அதிகம் எனினும் அப்போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என பொய் கூறி, சிறார்கள் சிலரை கைது செய்து அவர்களை உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் துன்புறுத்தி, கடும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பரவலாக ஊடகங்களில் வெளிவந்தன.

இணையதள ஊடகங்கள் பல அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தியிருந்தாலும் உபி மாநில அரசு மற்றும் உபி போலிஸ் இவற்றை வலுவாக மறுத்து வருகிறது.

உண்மைநிலையறியும் குழு:

சிறார் மீதான கொடுமைகள் , குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் மற்றும் மதரஸா சிறுவர்கள் மீதான வன்கொடுமை பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் இதன் உண்மையறியும் நடவடிக்கைகளில் களமிறங்கியது சில Fact Check நிறுவனங்கள், அதில் The Quill Foundation , Citizens Against Hate மற்றும் Haq : For child’s Rights ஆகிய தனியார் அமைப்புகளுடன் இணைந்து இணையதள ஊடகங்களின் சார்பாக The Quint செய்திப்பிரிவும் களத்தில் இறங்கியது.

சிறுவர்கள் மீது பூட்ஸ் கால் உதைகள்:

இதில் முதல் தரவாக அவர்கள் கொடுத்தது, உபி மாநிலத்தில் சுமார் 41 சிறுவர்கள் , போலீசின் பிடியில் சிக்கி உளவியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானது தெரியவருகிறது. போராட்டம் நடைபெற்ற இடங்களிலுள்ள மதரஸாவில் நுழைந்த போலீசார், அங்கிருந்த அப்பாவி சிறுவர்கள் அடித்து இழுத்துச்சென்று காவலில் வைத்ததோடல்லாமல் அவர்களை லத்தி சார்ஜ் மற்றும் பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இரவில் உறங்க கூடாது, உட்கார கூடாது போன்ற கொடுஞ்சித்திரவதைகளை கொடுத்துள்ளனர்.

சிறுவர்கள் குளிரில் நடுக்கம்:

மைனஸ் 6 டிகிரி குளிரில் அவர்களுக்கு போர்வை எதுவும் கொடுக்காமல் குளிரில் வாட்டி வதைத்தும், அயர்ச்சி காரணமாக தானாக உறங்கிப்போவோரை அடித்து எழுப்பியும் துன்புறுத்தியுள்ளனர். தண்ணீர் குடிக்கலாம் ஆனால் சிறுநீர் கழிக்க கூடாது, அருகிலிருப்பவன் உறங்கிப்போனால் உனக்கு தான் உதை கிடைக்கும் என மிரட்டப்பட்ட 14 சிறுவனின் வாக்குமூலத்தை பதிவாக்கியுள்ள அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் மூலம் புதிய எதிர்காலத்தை உருவாக்கித்தரவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

காவல் துறையா? காவி துறையா?

இதையடுத்து பிஜ்னோர் நகரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கொடுத்த வாக்குமூலத்தின் படி, குளிருக்கு போர்வை கேட்ட போது, தரையில் கிடக்கும் சாக்கினை எடுத்து கொடுத்து போர்த்த சொன்னதாகவும், உனக்கு உறங்க வேண்டுமெனில் பிரம்படிகளை பெற்றுக்கொண்டு உறங்கு என்பது போலவும் கொடூரமான செயல்களில் போலீசார் ஈடுபட்டது தெரியவருகிறது.

முஸாபர்நகர் மதரஸா மாணவர்கள் சிலர் வெள்ளியன்று நோன்பு பிடித்திருந்த நிலையில் அவர்களை ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி கட்டாயப்படுத்திய போலீஸ், நோன்பு திறக்க அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்றும், மாறாக இஸ்லாமிய தூதரை இழிவாக பேசி அவமதித்துள்ளனர் என்கிறார் மதரஸாவின் தாளாளர் சையது ஆஸாத் ரஸா ஹுசைனி.

சிறுநீர் கழிக்க கூடாது, தூங்க கூடாது:

இந்த தரவுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக அமைந்துள்ள Huffington Post செய்தி ஊடகம் அளித்த நேரடி கள ரிப்போர்ட் கூறிவதாவது, சில இடங்களில், கைதான சிறுவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டபோதும், ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்க கேட்டபோதும் அவர்களுக்கு பிரம்பு கொண்டு அடி கொடுக்கப்பட்டது.

ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கொரு முறையும் சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள், இடுப்புக்கீழாக அதிகம் அடிவாங்கியதால், 15 நாட்கள் வரையிலும் வலியாலும் வீக்கத்தாலும் அவதிப்பட்ட சிறுவர்கள் நடக்கவியலாமல் சிரம்ப்பட்டனர்.

தாக்கப்பட்ட சிறுவர்கள் அனைவருமே வெள்ளி முதல் ஞாயிறு வரை சிறையில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அவர்களை விடுவிக்க வாகனத்தில் ஏற்றிச்செல்லும் வழியில் ஒரு காவலர் ,அடித்து துன்புறுத்தப்பட்ட மாணவர்களை நோக்கி வீடியோ எடுத்தபடியே, யாருக்கோ வீடியோ காலிங் பேசிக்கொண்டிருந்தார், அதில் அவர் “வாருங்கள், இவர்களை போலவே உங்களுக்கும் எல்லாம் தயாராக உள்ளது” என மிரட்டும் தொனியில் பேசிக்கொண்டு வந்தார். எங்களை விடுவிக்கும் சமயத்தில் இனிமேல் இதுபோல அரசிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டால் இது்தான் கதி ” என்றும் எங்களிடம் கூறி அனுப்பினர், என்றான்.

போராடினால் துன்புறுத்துவோம்:

பிஜ்னோர், ஜலாலாபாத், ராக்கோடி மாவட்டங்களில் இதேபோல முஸ்லிம் குடியிருப்புகளில் புகுந்த போலீஸ், மிக கடுமையாக நடந்து கொண்டதோடல்லாமல், அரசிற்கு எதிராக போராட கூடாது என எச்சரிக்கை கொடுத்துக்கொண்டிருந்தனர். பல இடங்களில், வெவ்வேறு விதமான சித்ரவதைகளை அரங்கேற்றிய உபி போலிசாரின் குறிகோள் ஒன்று தான், முஸ்லிம்கள் போராட கூடாது, போராடினால் துன்புறுத்துவோம் என்பது தான் அது.

திருட்டு பாசிச கும்பல்:

அனுமதியின்றி இரவு நேரங்களில் வீடு புகுந்து ஒவ்வொரு வீட்டிலும் கொள்ளயடித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்தும் மிரட்டிய போலீசுக்கு உபி அரசு எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. இதை வைத்து அரசின் பூர்ண அனுமதியோடு தான் இது நடைபெற்றுள்ளது எனவே இந்த கொடுமைகளை விசாரிக்க நீதிமன்றம் சார்பில் விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஊடகங்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது் இதற்கான தனி கமிட்டி அமைத்து அனைத்து வித கொடுமைகளும் அதை செய்த போலீசும் விசாரணைக்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என இவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இது கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பவம்

தண்டனை வழங்கப்பட வேண்டும்:

2015 JJ Act எனப்படும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் , 15 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு நிகழும் கொடுமைகளை விசாரித்து கொடுமையில் ஈடுபட்டவருக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்

UNCRC எனப்படும் சர்வதேச ஐநா சிறுவர்கள் உரிமை ஆணயத்தின் உத்தரவுகளின் படி, சிறார்களுக்கு சுதந்திரமும் அமைதியும் ஏற்படுத்தி தர வேண்டும், மாறாக அவர்களை உடல் மற்றும் உளவியல் ரீதியாக தாக்குதல் செய்வோரை விசாரணை வளையத்தில் கொண்டுவந்து தண்டிக்க வேண்டும்.

வழக்கம் போல மறுப்பு:

உபியில் நடந்த சிறார்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமை ஆகியவை தேசிய மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்களின் விதிமிறல்களாக உள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால் இவையனைத்தையும் படித்து பார்த்த முசாபர்நகர் அடிஷ்னல் எஸ்.பி. சத்பால், இவை அனைத்தும் பொய்யான தகவல் எனக்கூறி அனைத்தையும் மறுத்துள்ளார் , பிஜ்னோர் எஸ்.பி சஞ்சீவ் தியாகி, இவற்றை படித்த பிறகு தனது கருத்தினை வெளியிடுவதாக கூறினார்.

அவருடைய கருத்தினை பெற்று இத்தரவுகள் மீண்டும் விரிவாக பிரசுரிக்கப்படும் என The Quint ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆக்கம்: நஸ்ரத்