தமிழகத்தை சேர்ந்த அரியலூர் மாவட்டம் மற்றும் தாலுகா ஏலாக்குறிச்சி அருகில் சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்த சேகர்(லேட்) அவர்களின் மகன் கனகராஜ் சவுதி அரேபியா – ரியாத்தில் உள்ள Retaj Al-Waseel எனும் தனியார் கம்பெனியில் மெக்கானிக் ஆக பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ரியாத்தில் உள்ள ராபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு உயர் சிகிச்சைக்காக சனத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 14-10-2019 அன்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு அம்மா மற்றும் 2 தங்கைகள் உள்ளனர். தகப்பனார் இறந்துவிட்டார்.
இச்செய்தியை அவருடன் பணியாற்றும் நவீன் அவர்கள் கனகராஜின் மாமா சகோ.வெங்கடேசன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார். செய்வதறியாத நிலையில் கம்பெனியின் Electronic Engineer காமேஸ்வரம் பழனிவேல் தமுமுக ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் திருப்பூண்டி அப்துல் ஹமீது அவர்களிடம் உதவி கோரினார்.
தகவலை பெற்ற அப்துல்ஹமீது அவர்கள் பழனிவேலுடன் விரைந்து செயல்பட்டு மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை தயார் செய்தார்.
உரிய ஆவணங்களை இந்திய தூதரக ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் ஒப்படைத்து கனகராஜ் உடல் பெற்று கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று( 01-11-2019 ) வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் இலங்கை வழியாக செல்லும் விமானம் மூலமாக கனகராஜ் உடல் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
மனிதநேய மிக்க இப்பணியை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உரிய நேரத்தில் கனகராஜ் உடலை எங்களிடம் ஒப்படைத்தீர்கள் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் நன்றி கூறினர்.