நாடு முழுவதும் பாஜகவின் கருப்புச் சட்டங்களுக்கு எதிராக தொடர் எழுச்சி போராட்டம் நடைபெற்று வரும் வேளையில் அதை குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஹிந்துத்துவாவினர் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமுள்ளன.
நாட்டில் சிஏஏ வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் எங்குமே மக்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. எனினும் பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் போராட்டங்களில் வன்முறை வெடித்தது, எனினும் அதன் மர்மத்தையும் மக்கள் உணர்ந்தே வைத்துள்ளனர்.
ஆனால் சிஏஏ ஆதரவு பேரணி செல்லும் பாஜகவினர் வெறுப்பு கோஷங்களை எழுப்புவது வன்முறையில் ஈடுபடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நாளை திருப்பூரில் சிஏஏ வுக்கு ஆதரவாக பேரணி நடத்த எடப்பாடி தலைமையிலான தமிழக அரசின் போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பதறிப்போய் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தங்கள் பிரியாணி அண்டா விற்கும், கடைக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு பிரியாணி கடை உரிமையாளர்கள் செயல்படுவதற்கு காரணம் உண்டு, முன்னதாக கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
அப்போது அவரின் இறுதி ஊர்வலத்தில் இந்துத்வாவினர் வன்முறையிலும், திருட்டு சம்பவத்திலும் ஈடுபட்டனர். குறிப்பாக பணம், செல்போன் மற்றும் பிரியாணி அண்டாகளை திருடி சென்றனர். இதுகுறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.