உபி ஹத்ராஸில் உள்ள புல்கரி கிராமத்தில் 19 வயது தலித் பெண் ஒருவர், உயர் சாதியை சேர்ந்த நான்கு நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உடலில் காயங்களுடன் உயிர் இழந்தார்.
பெண்ணின் மரணம் மற்றும் நள்ளிரவில் அவரது குடும்பத்தின் அனுமதியின்றி யோகியின் காவல்துறையினர் கட்டாய உடல் தகனம் செய்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக அமைந்தது. குடும்பத்தினரையும் ஊடகங்களையும் இறுதி சடங்கிலிருந்து விலக்கி வைத்தனர்,காவல்துறையினர்.
இது குறித்து செய்தி வெளியிட ஆர்மபத்தில் கோதி மீடியாக்கள் மறுத்தன, எனினும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி சமூக ஊடகங்களில் பரவலானதும் வட இந்திய மோடியாக்களும் செய்தி வெளியிட்டன. பல மீடியாக்கள் குழுமின. அந்த வகையில் இது குறித்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார் சித்திக் கப்பன், எனினும் உபி காவல்துறை அவரை கைது செய்து கடும் சித்திரவதைக்கு ஆளாக்கியது குறித்து பிபிசிக்கு அவர் பேட்டி அளித்துள்ளது கல் நெஞ்சையும் கரைக்கும் வண்ணம் உள்ளது.
சித்திக் கப்பன் மற்றும் அவரது மூன்று நண்பர்களும் ஹத்ராஸிலிருந்து 42 கி.மீ (26 மைல்) தொலைவில் காரில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். 150 நாட்களையும் கடந்து சிறையில் வாடி வருகின்றனர்.
கடும் சித்திரவதை:
கைது செய்யப்பட்ட அன்றைய இரவு கடும் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டதாக அவர் தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
“இழுத்து செல்லப்பட்டு, தொடைகளில் லத்தியால் தாக்கப்பட்டேன், முகத்தில் அறைந்தனர், விசாரணை என்ற பேரில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை விழித்திருக்க செய்தனர். கடும் மெண்டல் டார்ச்சருக்கும் ஆளாக்கினார்” என சித்திக் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயாளியான கப்பனின் இந்த கூற்றை உபி போலீசார் மறுக்கின்றனர். கப்பனும் அவரது நண்பர்களும் உபியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வந்தனர்(!), எனவே தான் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்கின்றனர் போலீசார்.
கப்பன் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் பிபிசியிடம் கூறுகையில், ஆரம்பத்தில் கப்பன் மீது ஜாமீன் வெளிவர கூடிய அளவிலான குற்றங்கள் சுமத்தப்பட்டதாக கூறினார். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, கப்பன் மீது தேசத்துரோகம் மற்றும் யுஏபிஏ பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களில் வழக்கு பதிவு செய்தனர், இதனால் ஜாமினில் வெளிவருவது சாத்தியம் அற்றதாக உள்ளது.” என கூறுகிறார்.
உபி போலீசார் சித்திக் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர் என்றும் அவர் ஊடகவியலாளர் பேரில் இங்கு வந்துள்ளார், உண்மையில் அவர் ஊடகவியலாளரே இல்லை என கூறுகின்றனர். எனினும் இது அப்பட்டமான பொய் எனவும் அவரை சிறையில் வைத்துள்ளது சட்டவிரோதமானது எனவும் பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துளளது.
சட்டம் செல்லுபடியாகும் மாநிலமா?:
கைது செய்யப்பட்ட பல வாரங்களுக்கு, நீதிமன்ற ஆவணங்களின்படி, சித்திகுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் அனுமதிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்ட 29 நாட்களுக்குப் பிறகு – நவம்பர் 2 ஆம் தேதி அவர் தனது குடும்பத்தினருக்கு முதல் தொலைபேசி அழைப்பைச் செய்ய அனுமதிக்கப்பட்டார், அதன்பிறகு எட்டு நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் பேசினார்.
வக்கீல் மேத்யூஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த 47 நாட்களுக்குப் பிறகுதான் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.
நவம்பர் 2 ஆம் தேதி அவரது தொலைபேசி அழைப்பு வரும் வரை “என் கணவர் உயிருடன் இருக்கிறார் என்பது கூட உறுதியாக தெரியவில்லை” என்கிறார் சித்திக்கின் மனைவி ரைஹானா.
சொந்த ஊரிலும் உபி போலீஸ்:
பின்னர் கடந்த மாதம், படுக்கையில் இருந்த, நோய்வாய்ப்பட்டிருந்த அவரது 90 வயதான தாயைப் பார்க்க உச்ச நீதிமன்றம் சித்திக்குக்கு ஐந்து நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அவர் அங்கு இருந்த நான்கு நாட்களிலும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆறு போலீஸ்காரர்களும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த போலீசாரும் காவலில் வைக்கப்பட்டனர்.
சித்திகுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட உபி போலிஸால் நிரூபிக்க முடியவில்லை என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு அபிலாஷ் கூறுகிறார். “இருப்பினும் அவர்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெற்றனர், அது ஹத்ராஸுக்கு செல்ல வேண்டாம் என்று செய்தியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததில் தான்” என்கிறார் அபிலாஷ்.