ஷர்ஜில் இமாம். நினைவிருக்கிறதா இவரை ?அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்துவிட்டு தற்போது இந்திய வரலாறு குறித்த மேலாய்வுக்காக டெல்லி ஜே.என்.யூவில் சேர்ந்துள்ள நிலையில் இன்று டெல்லி போலீசால் – அதாவது மோடி அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு வெளியே வரமுடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது போன்ற பிரச்சினைகளில் நியாயம் வேண்டி எழுதியும் பேசியும் வருகிற நாமும் கூட இவர் மீதான இந்தக் கொடும் நடவடிக்கை குறித்து ஒன்றும் எழுதாமல் போன குற்ற உணர்வோடுதான் இந்தப் பதிவைச் செய்கிறேன்.
ஷர்ஜில் இமாம் ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவரும் கூட. அவரது அருமையான கட்டுரைகள் சுமார் நான்கு அல்லது ஐந்தை நீங்கள் நெட்டில் தேடிப் படிக்கலாம். பசுவின் பெயரால் வன்முறைகள் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் புதிதல்ல என்பதை விளக்கி அவர் எழுதியுள்ள கட்டுரை முக்கியமான ஒன்று. அவர் மீது இப்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு குறித்து தனியே எழுதுவேன். இது அவர் குறித்த இன்னொரு செய்தியைத் தருகிறது சொந்த ஊரில் மாற்று மதத்தினருடன் இணைந்து செயலாற்றி ஒற்றுமை பேணும் குடும்பம் அவருடையது.
அங்குள்ள இந்துக் குடும்பங்கள் வணங்குவதற்காக ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்றபோது தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்கள் ஷர்ஜில் இமாமின் குடும்பத்தினர். அப்பகுதி மக்கள் இதை நன்றியோடு சொல்வதையும், அவர்கள் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த ஆலயத்தையும் இந்த வீடியோவில் காணலாம்.
ஆக்கம்: அந்தோணிசாமி