பெண்கள், விலை உயர்ந்த கேஜெட்டுகள் அல்லது வெளிநாட்டு பயணங்கள் என நாட்டின் மிக பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) பிரதமர் மோடி குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி புதுதில்லியில் ஜைடஸ் காடிலா, டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் வோக்ஹார்ட் உள்ளிட்ட உயர்மட்ட மருந்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளை மோடி சந்தித்ததாக தி பிரிண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
பிரதமர் ஏன் மறுக்கவில்லை?:
“உயர்மட்ட மருந்து நிறுவனங்கள் பெண்களை ‘எஸ்கார்ட்கள்’ வடிவில் மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கப்படுகிறது என்று மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும் பிரதமர் அலுவலகம் அந்த செய்திகளை மறுக்கவில்லை. ஒருவேளை பிரதமர் இவ்வாறு பேசியது உண்மை என்றால் அதனை இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக மறுக்கிறது” என ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.
பிரதமரை நோக்கி “நறுக்” கேள்வி:
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பெண்களை வழங்கி இருந்தால் அவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்ற விசாரணையை துவங்குவதை விட்டுவிட்டு அவர்களை அழைத்து பிரதமர் பேசுவதா ? என ஐஎம்ஏ கேள்வி எழுப்பியுள்ளது.
இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்ட மருத்துவர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும். அதன் பின்னர் மாநில மருத்துவ கவுன்சில்கள் தகுந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்:
பிரதமரின் கருத்து ‘சரிபார்க்கப்படாத’ தகவல்களின் அடிப்படையில் அமைந்திருந்தால், அவர் நாட்டின் மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்பது மட்டுமே பொருத்தமானது” என்று ஐஎம்ஏ தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கடும் கண்டனம் :
பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பானது சுகாதாரம் தொடர்பாக தீர்க்கப்படாத விஷயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகத் தோன்றுகிறது. மோடி அரசாங்கத்தின் முதன்மை சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் “ஒரு ஸ்டார்டர்ஸ் திட்டம் அல்ல, சிகிச்சை ஏற்கனவே இலவசமாக உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மோடி அரசாங்கம் எந்தவொரு “உள்கட்டமைப்பிலோ அல்லது மனித வளத்திலோ” புதிய முதலீடு செய்யவில்லை ” என்று மோடி அரசை ஐஎம்ஏ கடுமையாக விமர்சித்துள்ளது.
இப்படி பேசுவது பிரதமருக்கு தகுமா ?
“பிரதமர் அலுவலகத்திலிருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளியாவது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறான மொழி பிரயோகம் பிரதமர் அலுவலகத்திற்கு தகுதியானது இல்லை ” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் ராஜன் சர்மா தி டெலிகிராப்பிடம் தெரிவித்தார்.