சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்ட திட்டங்கள் பெண்களுக்கு எதிரானவை, அது எப்படி என்கிறீர்களா?
முதலில் ஒரு பொதுவான விஷயத்தை தெரிந்து கொள்வோம்: உலகில் எந்த நன்மை நடந்தாலும் அதில் முதலாவது மற்றும் அதிகப் பயன் பெறுவது ஆண்கள்தான். உதாரணத்துக்கு இந்தியாவில் பள்ளிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பொழுது ஆண்கள்தான் முதலில் கல்வி கற்க அனுப்பப் பட்டனர். நவீன உடை இந்தியாவுக்கு வந்த பொழுது சமூகத்தில் எந்த முணுமுணுப்பும் இன்றி ஆண்கள்தான் சௌகரியமான பேண்ட் சட்டைக்கு மாறினார்கள்.
இன்று வரை பள்ளிக்கல்வி பெறும் பெண்களின் விகிதம் ஆண்களை விடக் குறைவாகவே இருக்கிறது. போலவே இன்று வரை பெண்கள் நவீன சௌகரியமான ஆடை அணியலாமா என்ற விவாதம் நடந்து வருகிறது. அந்த விவாதங்களையும் ஆண்களாகிய நாம்தான் நடத்தி வருகிறோம்.
பெண்களுக்கே அதிக பாதிப்பு:
மாறாக, உலகில் எந்த அநீதி நடந்தாலும் அதில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஒரு போரில் தோற்ற சமூகத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அமெரிக்க அடிமை முறையில் ஆண் பெண் இருவரும் கடும் உடல் உழைப்புக்கு உள்ளாக்கப் பட்டாலும் பெண் கூடுதலாக பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாகி இருந்திருக்கிறாள். அதன் மூலம் வந்த குழந்தையைப் பேணும், அதன் விளைவாக வரும் சமூக பகிஷ்கரிப்புகளுக்கும் ஆளாகி இருக்கிறாள். பிரிவினைக் கலவரங்களில் பெண்கள் சந்தித்த கோரங்கள் எழுத்தில் வடிக்க இயலாதது.
69 சதவிகிதம் பேர் பெண்கள்:
சரி, இப்பொழுது இந்தியாவுக்கு வருவோம். ஆண்களை விடப் பெண்கள் இந்த சட்ட திட்டங்களால் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு நம்மிடம் இருக்கும் நேரடி ஆதாரம் அஸ்ஸாம். அங்கே சமீபத்தில் நடந்த NRCயில் குடிமக்கள் அல்லாதோர் பட்டியலில் இருப்பவர்களில் 69 சதவிகிதம் பேர் பெண்கள். அதாவது மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் பெண்கள் விடுபட்டுப் போய் இருக்கிறார்கள். ஏன் அப்படி நடந்திருக்கிறது? காரணம் மிக எளியது.
அஸ்ஸாமில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்ட பொழுது பின்வரும் ஆவணங்கள் தேவையானவை பட்டியலில் இருந்தன: முந்தைய தேர்தலில் வாக்களித்த அத்தாட்சி, நிலவுடமை பத்திரங்கள், அரசு லைசென்ஸ், வங்கிக் கணக்கு, பிறப்பு சான்றிதழ், பள்ளி அல்லது பல்கலைக்கழக சான்றிதழ், பாஸ்போர்ட், எல்ஐசி பாலிசி.
நமக்கே தெரியும்!:
இந்தியா போன்ற தெற்காசிய தேசங்களில் இவை எதுவுமே இல்லாத பெண்கள் இருக்கிறார்கள். (இவை எதுவுமே இல்லாத ஆண்களும் இருப்பார்கள். ஆனால் பெண்களை விட விகிதம் குறைவாக இருக்கும்.) பெண்கள் பெயரில் நிலம் இருக்காது. நிறைய ஊரகப் பகுதிகளில் பெண்கள் வாக்களிப்பதில்லை. ஆரம்பக் கல்வியோடு பெண்கள் நிறுத்தப் படுவது இன்றளவும் நடந்து வருகிறது. இந்தியாவில் ஆண்களே கூட நிறைய பேர் இன்சூரன்ஸ் வைத்திருக்கவில்லை.
பெண்கள் நிலை இன்னமும் மோசம். படித்த, வசதி பெற்ற உயர் வர்க்கத்தினர் மட்டும்தான் அவர்கள் வீட்டுப் பெண்கள் பெயரில் பாலிசி எடுக்கிறார்கள். படித்த மற்றும் வேலைக்குப் போகும் பெண்கள் தங்கள் பெயரில் எடுத்துக் கொள்கிறார்கள். எல்ஐசி இணையதள தகவலின் படி கடந்த ஆண்டில் மொத்தம் 2 கோடியே 80 லட்சம் பாலிசி விநியோகிக்கப் பட்டு இருக்கிறது. இதில் 90 லட்சம்தான் பெண்கள் பெயரில் இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு.
பரம்பரை விபரம் :
திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னமும் அதிகம். தாங்கள் பிறந்த வீட்டு விபரங்கள் கொடுப்பதா அல்லது புகுந்த வீட்டு விபரங்கள் கொடுப்பதா என்பதில் தெளிவில்லை. எப்படி கொடுத்தாலும் உங்கள் பரம்பரை விபரம் (legacy data) ஒரு முறை பதியப்பட்டு விட்டால் அதனை மாற்ற இயலாது. இது பெரும் தொல்லையை உருவாக்கும்.
யோசித்துப் பாருங்கள்: புகுந்த வீட்டு விபரத்தை கொடுத்து விட்டு அதில் ரேஷன் கார்டில் தங்கள் பெயர் இன்னமும் சேர்க்கப்படவில்லை என்று தெரிந்தால் பிரச்சினை. பிறந்த வீட்டு விபரம் கொடுத்து விட்டு அவர்கள் தன் பெயரை அடித்து விட்டிருந்தால்? மணமான பெண்கள் அவர்களின் குடும்பப்பெயரையும் மாற்றிக் கொள்கிறார்கள். அப்பொழுது திருமணத்துக்கு முந்தைய, பிந்தைய ஆவணங்களுக்கு இடையே தொடர்பையும் காட்ட வேண்டி இருக்கும்.
இப்படிப்பட்ட குழப்பங்கள் இந்திய ஆண்களுக்கு இருப்பதில்லை.
நிற்க, தேசிய அளவில் NRC அமுல் படுத்தப்படும் பொழுது என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஆனால் எந்த ஆவணப் பட்டியல் முடிவானாலும் சுமார் 15 முதல் 18 கோடிப்பேர் விடுபட்டுப் போவார்கள். நாம் மேலே கண்ட 3:1 விகிதத்தின் படி இதில் 12 கோடிப்பேர் பெண்களாக இருக்கும் சாத்தியக்கூறு மிக அதிகம்.
இதுதான் இங்கே பெண்கள் நிலைமை. அப்படியே அந்தப்பெண் பெயர் விடுபட்டுப் போய் விட்டால் குடிமக்கள் தீர்ப்பாயத்தில் அல்லது நீதிமன்றங்களில் போய் அந்தப்பெண் அப்பீல் செய்வது, வழக்காடுவது சாத்தியமாகுமா என்பது அடுத்த கேள்வி. எல்லாம் நடந்து அவள் குடிமகள் அல்ல என்று தீர்ப்பு வந்து விட்டால் அந்தப்பெண் முஸ்லிமாக இல்லாத பட்சத்தில் CAA சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து குடியுரிமை பெற்று விடலாம். முஸ்லிம் பெண்ணுக்கு அந்த வசதியும் மறுக்கப்பட்டு விடும்.
அவள் தடுப்பு முகாமுக்கு போவாளா அல்லது குடிமக்கள் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு எதற்கும் பிரயோசனமில்லாதவளாக வீட்டில் உட்காருவாளா என்பதுதான் இங்கே இருக்கும் ஒரே கேள்வி. அப்படி வீட்டில் முடங்கும் பெண்கள் எப்படிப்பட்ட மரியாதையப் பெறுவாள், எப்படி நடத்தப்படுவாள் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
CAA, NRC, NPR போன்ற சட்ட திட்டங்களை யோசிப்பவர்கள், உருவாக்குபவர்கள் மதவாதிகள் மட்டுமல்ல, ஆணாதிக்க வாதிகளும் கூட. அவர்கள் வாழ்வில் பெண்கள் சமையலறையை விட்டு தாண்டுவதில்லை. தாண்ட அனுமதியும் இல்லை.
‘மண்ணும் பெண்ணும் ஒன்னு’:
அப்படிப்பட்ட ஜென்மங்கள் பற்றி சட்ட வடிவமைப்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்தான் என்ன? ‘மண்ணும் பெண்ணும் ஒன்னு,’ என்று வசனம் மட்டும் பேசுவார்கள். அதன் உண்மையான அர்த்தம் இதுதான்: இவர்களுக்கு வாழ்வுத் தேவைக்கும் வசதிக்கும் இருக்கும் ஒரு விஷயம்தான் மண். பெண்ணும் அப்படித்தான். சாப்பாட்டு நேரமும், காம உணர்ச்சி பொங்கும் நேரமும் தாண்டி பெண்கள் என்று ஒரு இனம் இருப்பதை இவர்கள் கவனிப்பதில்லை. இந்த இரண்டைத் தாண்டி அவர்களின் தேவை ஏதாவது நமக்கு இருக்கிறதா என்ன?
ஆக்கம்: அரவிந்த் சுப்பிரமணியம்