NPR

என்.பி.ஆர் மற்றும் சென்சஸ் கணக்கெடுப்பு ஒத்திவைப்பா? உண்மை நிலவரம் என்ன?

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மத்திய டெல்லி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் லட்சத்தீவு மற்றும் மேகாலயாவில் துவங்க இருந்த என்பிஆர் மற்றும் 2021 க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

என்பிஆர் மற்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பிர்கான கால அவகாசத்தை மாற்றி அமைக்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று ஒடிசாவின் முதலமைச்சரான நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் . அதில் தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக மாநில அரசின் முழு சக்தியையும் பயன்படுத்தி போராடி வரும் வேளையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்பிஆர் போன்ற திட்டங்களை தள்ளி வைக்குமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊடகங்களில் வெளியான செய்திகள்:

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள விதிகளுக்கு முரணாக இருப்பதால் என்பிஆர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக திஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு / என்.பி.ஆர் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து உள்துறை அமைச்சக அதிகாரிகள் வாய் திறக்கவில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் இது குறித்த ஒரு முடிவு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. கோவிட் -19 இல் கவனம் செலுத்தப்படுவதால், தொடக்க தேதி சிறிது தள்ளிவைக்கப்பட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு / என்.பிஆர் பயிற்சியை செப்டம்பர் 2020 காலக்கெடுவிற்குள் முடிக்க முடியும் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் முடியும் வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் (என்.பி.ஆர் மற்றும் வீடு பட்டியலிடும் சென்சஸ்) ஒத்திவைக்கப்படும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே என்.பி.ஆர் ஆனாலும் சென்சஸ் ஆனாலும் தேதி ஒத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

என்.பி.ஆர்:

NPR என்பது நாட்டின் வழக்கமான குடியிருப்பாளர்களின் (usual residents) பதிவேடு. குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள், 2003 ஆகியவற்றின் கீழ் உள்ளூர் (கிராமம் / துணை நகரம்), துணை மாவட்டங்கள், மாவட்ட, மாநில மற்றும் தேசிய மட்டங்களில் இது தயாரிக்கப்படுகிறது. ‘குடியிருப்பாளர்’ என்பது கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் உள்ளூர் பகுதியில் வாழ்ந்த நபர் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த பகுதியில் வசிக்க விரும்பும் நபர் என வரையறுக்கப்படுகிறது.

கடந்த முறை நடந்த என்.பி.ஆர்:

2015 ஆம் ஆண்டில் என்.பி.ஆர் பதிவேட்டை புதுப்பிக்கும்போது, ​​ஆதார் மற்றும் அவற்றின் மொபைல் எண் போன்ற விவரங்களை அரசு கேட்டது.

இந்த முறை, அவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்படலாம், இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பான் அட்டை விவரங்கள் சேகரிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2019 டிசம்பரில், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நாடு முழுவதும் என்.பி.ஆர் புதுப்பிக்க 3,941.35 கோடி ரூபாய் எனவும் , அஸ்ஸாம் தவிர, 2021 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு, 8,754.23 கோடி எனவும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள் எதிர்ப்பு:

பல மாநிலங்கள் NPR புதுப்பிப்பு குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளன, குறிப்பாக பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் போன்ற புதிய கேள்விகளுக்கு மாநில அரசாங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

என்.பி.ஆர் பயிற்சி மேற்கொள்ளப்படாது என்று கேரளா கூறியுள்ள நிலையில், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளும் இதை நிறுத்தி வைத்துள்ளன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களும் , பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீஹாரிலும் கூட 2010ம் ஆண்டின் மாதிரியின் படி என்.பி.ஆர் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை உள்ளடக்கிய குறைந்தது 13 மாநிலங்களும், டெல்லி யூனியன் பிரதேசமும் மோடி அரசின் புதிய வடிவிலான என்.பி.ஆரை எதிர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.