Assam NRC

“அமித்ஷாவின் நாடு தழுவிய NRC என்பது மோதியின் பணமதிப்பிழப்பிற்கு சற்றும் குறைந்ததல்ல” – த்ருவ் ராதே.

த்ருவ் ராதே தி பிரிண்ட் எனும் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் மொழிபெயர்ப்பு..

உள்துறை அமைச்சரான  அமித்ஷாவின் நாடு தழுவிய என்ஆர்சியை (தேசிய குடிமக்கள் பதிவேட்டை) அமல்படுத்த வேண்டும் எனும் அவரது தொடர் வற்புறுத்தல்கள் குறித்து ‘இது இந்திய அரசியலமைப்பு மற்றும் அறத்திற்கு எதிரானது’ என்று கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுவது சரியான ஒன்று தான். ஆனாலும் இந்த விமர்சனங்கள் , புதிய வாக்குறுதிகளை அளிப்பதை விட்டும் அவரை தடுக்கவில்லை . வரும் 2024க்குள் இந்தியாவில் ஊடுருவியவர்களை நான் வெளியேற்றுவேன் என்று கடந்த திங்கள் கிழமையன்று அமித்ஷா  பேசியிருக்கிறார்.

இவர் இப்படி தொடர்ந்து பேசி வந்தாலும் இவரின் இந்த கேலிக்கிடமான, நாடு தழுவிய என்ஆர்சி திட்டம் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது  என்பது குறித்து பலரும் கவனிக்க தவறி விடுகின்றனர். அமித் ஷாவின் இந்த திட்டத்தினை டொனால்டு ட்ரம்ப்பின்  அமெரிக்க – மெக்சிகோ இடையே தடுப்பு எல்லைச்சுவர் கட்ட விரும்பும் திட்டத்தை விடவும் நான் குறைத்தே மதிப்பிடுவேன். பல பழமைவாதிகள் தங்களின் சித்தாந்த ரீதியிலான காரணங்களுக்காக  NRC, தடுப்பு எல்லைச்சுவர் கட்டுவது போன்றவைகளை ஆதரிக்கலாம். ஆனால் அதே சமயம் இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற மிக பெரிய அளவிலான பொருளாதாரம் தேவைப்படும் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

என்ஆர்சி  விஷயத்தில் அஸ்ஸாம் விரும்பத்தகாத ஒரு எடுத்துக்காட்டாக  நம் கண்முன்னே இருக்கும்பொழுது இந்த திட்டம் தேசிய அளவில் அமல் படுத்தப்படுமானால்  நாடு  என்ன நிலைக்கு ஆளாகும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அஸ்ஸாமில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) கணக்கெடுப்பானது, முழுவதுமாக புதுப்பிக்கபட, மத்திய அரசுக்கு ₹1600 கோடி செலவாகியுள்ளது. அஸ்ஸாமில் 3.2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் விண்ணப்பிக்க, அவர்களை 55,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

ஆவணங்களைக் கண்டுபிடிப்பதற்கும், விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும், அலுவலகங்களை நோக்கி பயணம் மேற்கொண்டதற்கும், பல மணிநேரங்கள் (சொந்த வேலையை விட்டு) வரிசையில் நின்றதற்கும், இப்படி தங்களது பெயர்களை பதிவு செய்வதற்கு ஒரு சராசரி நபருக்கு என்ன செலவாகி இருக்கும் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தரவுகளும் இல்லை. இதில் கொடுமை என்னவென்றால் இவ்வாறு தங்கள் குடியுரிமையை நிரூபிக்க பலர்  ஒன்றுக்கும் மேற்பட்ட முறை என்ஆர்சி அலுவலகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Photo:  [Reuters]

இதில் பல மக்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும்  அழைத்து கொண்டு நீண்ட நெடிய தூரம் பயணம் மேற்கொள்வதற்கு  தள்ளப்பட்டனர். ஆரம்பத்தில் 40 லட்சம் பேர் NRC பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே இந்த அளவிற்கு பெரிய மக்கள் தொகை விடுபட்டு போனதால்  மீண்டும் சரிபார்ப்பு சுற்றுகள் நடைபெற்றன. இவை அனைத்தும் மக்களின் நேரம், பொருளாதாரம் மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றின் ‘பிரமாண்டமான’ இழப்பில் தான் முடிவுற்றது..

பணமதிப்பிழப்பை போன்ற மற்றொரு மாஸ்டர் ஸ்ட்ரோக் தான் என்.ஆர்.சி !

மோசமான முறையில் திட்டமிடப்பட்ட ஒரு முடிவை  நடைமுறைப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கூட மோடி அரசாங்கம் பாடம் படித்ததாக தெரியவில்லை.

முட்டாள்தனமான ஆலோசனையும் , தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவும் தான் 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியுற காரணமாக அமைந்தது.

கடந்த நவம்பர் 2016 ல் பல வங்கி அதிகாரிகள் லஞ்சம் பெற்று கொண்டு “கருப்பு பணத்தை” வெள்ளையாக மாற்றி கொடுத்தனர், இதனால் ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட முழு அளவிலான கருப்பு பணமும்  அன்றாட பணப்புழக்கிற்குள் கலந்து விட்டது.  இதற்கு ஒப்பத்தான் என்.ஆர்.சி யும் உள்ளது. வங்கி அதிகாரிகளின் இடத்தில ஒருவரது பெயரை இணைக்கவோ, நீக்கவோ அதிகாரம் படைத்த  ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரிகளாக மாற்றி வைத்து யோசித்து பாருங்கள்.

AFP/Getty Images

அதிகாரிகள் கமிஷன் வாங்கி கொண்டு பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ செய்ய கூடும் என்பதை மறுக்க முடியாது. எனவே, அஸ்ஸாமின் இறுதி NRC பட்டியல் வெளியிடப்பட்டபோது கிட்டத்தட்ட அனைவரும் ஏமாற்றமடைந்ததில் ஆச்சரியமில்லை. சிலர் இந்துக்களின் பெயர் பட்டியல்  விடுபட்டதாக கூறி அழுதனர்; வேறு சிலரோ சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகளின் எண்ணிக்கை, பட்டியலில் குறைவாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டனர்.

இந்திய குடிமக்களின் இறுதி பதிவேடு தயாரிக்கப்பட்ட பிறகும் இந்த பிரச்சனை முடிவுக்கு வர போவதில்லை என்பது தான் பணமதிப்பிழப்பை விடவும் என்.ஆர்.சி யை ஒரு பெருந்தவறாக காட்டுகிறது. இறுதி பதிவேடு தயாரிப்பது மொத்த செயல்திட்டத்தின் முதல் பகுதி மட்டுமே. என்.ஆர்.சி  இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் விஷயத்தில் என்ன நடக்கும் ? அவர்கள் எங்கு போவார்கள்? என்பதை சிந்திக்கும் போது தான்  பிரச்சினை எந்த அளவிற்கு பெரிதாக உள்ளது என்பதை உணர முடியும்.

பெயர் விடுபட்ட மக்களை என்ன செய்வது என்ற கேள்விக்கு என்.ஆர்.சி யை ஆதரிக்கும் தரப்பு “அவர்களை வங்க தேசத்துக்கு அனுப்புங்கள்” என்று பதிலை தயாராக வைத்துள்ளனர். ஆனால் அந்த பதில் அமெரிக்க- மெக்ஸிகோ சுவருக்கு மெக்ஸிகோ தான் பணம் செலுத்த வேண்டும் என்ற ட்ரம்பின் கூற்றைப் போல அபத்தமானது. மெக்ஸிகோவிற்கு சுவரை எழுப்ப என்ன தேவை உள்ளது..? அதேபோலத்தான் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றுக்கொள்ள வங்க தேசத்திற்கு என்ன தேவை உள்ளது..? சட்டவிரோத குடியேறிகளை எந்தவித அரசியல் அல்லது பொருளாதார ஆதாயமும்  இல்லாமல் வங்க தேச அரசு ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.? .

நாடு கடத்தப்பட்டவர்கள் எவரையும் வங்க தேசம் ஏற்றுக் கொள்ளாது என அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா ஏற்கனவே அறிவித்துவிட்டார். சர்வதேச அளவிலான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு மோதி  அரசாங்கம் இரண்டாவது தேர்வான தடுப்பு மையங்களை (detention centres) நோக்கி செல்கிறது.

தீர்வே மிகப்பெரும் பிரச்சினை!

தடுப்பு மையங்களை அமைப்பது  தார்மீக நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. எனினும் இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உள்ளதால் அதில் கவனம் செலுத்தாமல் என்ஆர்சி நடைமுறை படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொள்வோம்.


3000 பேரை வசிக்க தேவையான அளவிற்கு 2.5 ஏக்கர் நிலத்தில் அஸ்ஸாமில்  கட்டப்பட்டு வரும் முதல் தடுப்பு மையத்தின் செலவே ₹46கோடி ருபாய். ஆனால என்.ஆர்.சியின் இறுதி பட்டியலில் இருந்து  விலக்கப்பட்டுள்ளவர்கள் 19 லட்சம் பேர் !. அதாவது இவர்கள் அனைவருக்கும் தடுப்பு மையங்களை கட்டுவதாக இருந்தால்  ₹27,000 கோடிக்கும்  மேல் செலவாகும். எனினும் இது அஸ்ஸாமின் செலவு மட்டுமே. அப்படியானால் இந்தியா முழுவதும் தடுப்பு மையங்களை கட்டுவதற்கான செலவை கற்பனை செய்து பாருங்கள்! மோடி அரசு எத்தனை தடுப்பு மையங்களை தான் கட்ட முடியும்..??

A new detention center being set up in Goalpara, Assam. (Image: News18)

மேற்சொன்ன கணக்கில் தடுப்பு மையங்களின் பராமரிப்பு, உறைவிடம் , உணவு போன்றவை அடங்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்!. இதற்கெல்லாம் என்ன ஒரு சில லட்சம் கோடிகள் தானே செலவாக போகிறது என்று கூறி கடந்து செல்ல பார்க்கிறோம். ஆனால் இந்த செலவுகளுக்கு ஈடான பணத்தினை ஆயிரக்கணக்கான பள்ளிகள், மருத்துவமனைகள், சேரிகளின் மறுவாழ்வு போன்றவற்றிற்கு செலவழிக்கலாம். அதுதான் இந்தியர்களுக்கு நன்மைகளை பெற்றுத் தரும் என்பதை உணர வேண்டும்.

பணத்தை எதில் செலவிடுவது..?

இந்தக் கட்டத்தில் இயல்பான கேள்வி நமக்கு எழலாம்.. ‘அப்படியானால் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் விடயத்தில் என்ன செய்வது ..? அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது..?’ என்று..  இதற்கு பல  மக்கள் சிந்திப்பது போல் அல்லாமல்  ஒரு எளிமையான தீர்வு இருக்கிறது. எனினும் அந்த தீர்வில் உள்ள  முட்டுக்கட்டை என்னவெனில் அதனை அரசியல் ரீதியாக சந்தைப்படுத்த முடியாது. ஒன்று நாட்டின் எல்லை கட்டுப்பாட்டை சிறப்பாக மேம்படுத்துவது. மற்றொன்று வங்கதேசத்திற்கான வெளிநாட்டு உதவி தொகையை உயர்த்துவது.

ஒரு நாட்டிலிருந்து வெளியேறி மற்றோரு நாட்டிற்க்கு மக்கள் செல்ல வைக்கும் காரணங்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதை எதிர்கொள்ள வேண்டும். பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி கூடங்கள் அமைப்பதில் பொருளாதாரத்தை சிறப்பான முறையில்  செலவு செய்வதின் மூலம் இம்மக்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கலாம். இந்தியாவிலும் வங்கதேசத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் வெறுமென பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல்  அண்டை நாடுகளுடனான உறவுகளை சுமூகமாக வைத்திருக்கவும் உதவும்.

இதன் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் விஷயத்தில் இணக்கமான தீர்வை எட்ட முடியும். எல்லைகளுக்கு அப்பால் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதால், அவர்கள் சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் புகுவதை தடுக்க முடியும். இதற்கான பொருளாதார செலவானது என்ஆர் சி க்கு ஆகும் செலவிற்கு ஈடாகவோ அல்லது அதை விட குறைவானதாகவோ தான் இருக்கும்.

Courtesy: The Print