Intellectual Politicians NPR Tamil Nadu

என்.பி.ஆர் குறித்து அமைச்சர் உதயகுமாரின் கண்துடைப்பு அறிவிப்பு…

தமிழக வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு மூன்று மாதங்களாக லட்சோப லட்சம் தமிழக மக்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா என நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்..

கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பெண்கள் குழந்தைகள், முதியோர் என “சாஹின் பாக்” என்ற பெயரில் இரவு பகலாக தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

தொழில் நிறுவனங்கள், வியாபாரம், உழைப்பு, அன்றாட அலுவல்கள், குடும்பத்தை கவனிக்காமை, வருமானம் இழப்பு, உடல்நலம் பேணாமை என எண்ணற்ற இழப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தும் கொரோனாவாலும் முஸ்லிம்களின் போராட்டத்தை அசைத்துப் பார்க்க முடியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலித்து கோரிக்கையின் வீரியத்தை அரசுக்கு வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் சி.ஏ.ஏ.வை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்திய‌ முஸ்லிம்கள், தமிழக அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை என்பதை ஏற்று
அதைப்பின்னுக்குத் தள்ளிவிட்டு,என்.பி.ஆர்.கணக்கு நடத்த மாட்டோம் என்று மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி போராடி வருகின்றனர்.

2010 கணக்கெடுப்பின் போது கேட்கப்பட்ட கேள்விகளுடன், கூடுதலாக சில தகவல் திரட்டுகள் 2020 க்கான என்.பி.ஆர். கணக்கெடுப்பில் உள்ளது; அதை நீக்கிவிட்டு என்.பி.ஆர். கணக்கெடுப்பு எடுக்கலாம் என்ற வாதமும், சிறுபான்மையினர் அச்சப்படத் தேவையில்லை.

சிறுபான்மையினருக்கு எந்தப் பாதிப்பும் வராது; அ.தி.மு.க. அரசு அரணாக நிற்கும் என்பதும் என்.பி.ஆரின் விபரீதங்கள் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாதது.

என்.பி.ஆர்.கணக்கெடுப்பு எடுத்தால் சிறுபான்மை மக்களை விட, பெரும்பான்மை மக்களுக்குத் தான் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் திட்டமிட்டு மறைக்கும் செயல்.

முஸ்லிம்கள் களத்தில் உறுதியாக நின்று போராடுவது முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவருக்காகவும் தான். அதனால் தான் விபரமறிந்த முஸ்லிம் அல்லாதவர்களும், பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர மற்ற எல்லா கட்சியினரும், அமைப்பினரும் களத்தில் இணைந்துள்ளார்கள்.

மக்களின் வலிமையான அறவழிப் போராட்டங்களை கண்ட பிறகும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கண்துடைப்பு அறிவிப்பை மாநில அரசு செய்துள்ளது.

என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த .மக்களுக்கு ஏமாற்றம் தந்த சட்டசபை அறிவிப்பால், என்.பி.ஆர்.க்கு எதிரான மக்களின் போராட்டம் மேலும் வீரியமெடுக்கும் என்ற உளவுத் துறையின் எச்சரிக்கையையடுத்து, இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது பேட்டியில்,

என்.பி.ஆர்.ல் சில கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லாததால் தமிழகத்தில் என்.பி.ஆர்.கணக்கெடுப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறார்.

முஸ்லிம்களின் கோரிக்கை சில கேள்விகளை நீக்குவதல்ல. அறவே என்.பி.ஆர். கூடாது என்பது தான். இதை ஏற்று நாளைக்கே தமிழக முதல்வர் இதை சட்டப்பேரவையில் அறிவிக்கட்டும். தமிழகம் அமைதியாகும்‌.

முஸ்லிம்களின் கோரிக்கையில் இல்லாத திருத்தங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் அதுவரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்பது கடுகளவும் பயன் தராது.

என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) அறிக்கை வெளியிட்டுள்ளது.